மழைக்கால நோய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மாநகராட்சி அதிகாரி தகவல்


மழைக்கால நோய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மாநகராட்சி அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 2 Jun 2018 5:07 AM IST (Updated: 2 Jun 2018 5:07 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் மழைக்கால நோய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளதாக சுகாதாரத்துறை கூடுதல் கமிஷனர் கூறினார்.

மும்பை,

மும்பை பெருநகரில் மழைக்காலம் ஆரம்பம் ஆனாலே சாதாரண சளி, காய்ச்சல் மட்டுமின்றி டெங்கு, மலேரியா, எலிக்காய்ச்சல் போன்ற உயிர் பலி வாங்கும் நோய்களும் படையெடுக்க ஆரம்பித்துவிடும். இந்த ஆண்டு வருகிற 6-ந் தேதி முதல் மழைக்காலம் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

ஆண்டுதோறும் மழைக்காலத்தின் போது, மழைநீர் தேக்கம் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பாதிப்புகள் அதிகரித்துவிடுகின்றன.

மும்பை நகரில் மழைக்கால நோய் பாதிப்பில் இருந்து தப்புவதே ஒவ்வொரு ஆண்டும் சவாலாக இருக்கிறது.

இந்த நிலையில், மழைக்கால நோய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாநகராட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. இதுபற்றி மாநகராட்சி சுகாதாரத்துறை கூடுதல் கமிஷனர் இட்சஸ் குந்தன் கூறுகையில், “ மழைக்கால நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாநகராட்சி மருத்துவமனைகளில் 2 ஆயிரத்து 500 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மழைக்கால நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்று சிகிச்சை அளிப்பதற்கு டாக்டர்கள், நர்சுகள் என ஆயிரம் பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. போதிய அளவில் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன” என்றார்.

மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி பத்மஜா கேஸ்கர் கூறுகையில், “மழைக்காலத்தில் மக்கள் நன்கு காய்ச்சிய நீரை பருக வேண்டும்.

நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். சுகாதாரமற்ற உணவு பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்” என்றார். 

Next Story