குஜராத்தில் இருந்து மீட்கப்பட்ட ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகள் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன
குஜராத்தில் இருந்து மீட்கப்பட்ட ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகள் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. இந்த சிலைகளுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கும்பகோணம்
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜசோழன், அவரது பட்டத்தரசியான லோகமாதேவி ஆகியோருக்கு அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே பெரிய கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது ராஜராஜனின் படைத்தளபதியான சேனாதிபதி மும்முடிச்சோழ பிரம்மராயன் என்பவரால் ஐம்பொன்னால் சிலைகள் வடிவமைக்கப்பட்டது.
இந்த இரு சிலைகளும் தஞ்சை பெரிய கோவிலின் மூலவரான பெருவுடையாரை நோக்கி வணங்குவது போல வைக்கப்பட்டிருந்தது.
தஞ்சை பெரிய கோவிலில் இருந்த இந்த 2 சிலைகளும் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானது. இந்த சிலைகள் கோவிலின் உயர் நிலை நிர்வாகிகள் சிலரால் திருடப்பட்டு தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள சருக்கை கிராமத்தை சேர்ந்த ராவ்பகதூர் சீனிவாச கோபாலச்சாரி என்பவர் மூலம் சென்னையில் கவுதம் சாராபாய் என்பவருக்கு பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சிலைகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சாராபாய் பவுண்டேசன் காலிகோ அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிய வந்தது.
இந்த சிலைகளுக்கு பதிலாக வேறு சிலைகள் தஞ்சை பெரிய கோவிலில் வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. குஜராத்தில் உள்ள ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகளை மீட்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக தஞ்சாவூரில் உள்ள பல்வேறு அமைப்புகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தஞ்சை பெரிய கோவிலில் இருந்து சிலைகள் காணாமல் போனது தொடர்பாக எந்த புகாரும் போலீஸ் நிலையத்தில் பதிவாகாமல் இருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் காணாமல்போன சிலைகளை கண்டுபிடித்து மீட்கும் பணியில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் களம் இறங்கினர். ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு கடந்த மார்ச் மாதம் வந்து சிலைகள் தொடர்பாக ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 29-ந் தேதி தஞ்சை பெரிய கோவிலில் சிலைகள் மாயமானது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் குஜராத் மாநிலத்துக்கு சென்று அங்கிருந்து ராஜராஜ சோழன், லோகமாதேவி ஆகியோரின் சிலைகளை மீட்டுக்கொண்டு ரெயில் மூலம் சென்னை வந்தனர்.
சென்னையில் இருந்து நேற்று காலை கார் மூலம் இந்த சிலைகள், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் நடைபெறும் கும்பகோணம் கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டது. கும்பகோணத்துக்கு ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகள் கொண்டு வரப்படுவது குறித்து வந்த தகவலை தொடர்ந்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில், கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசமூர்த்தி மேற்பார்வையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
சென்னையில் இருந்து சிலைகளுடன் புறப்பட்ட கார் நேற்று மதியம் 1 மணிக்கு கும்பகோணம் கோர்ட்டு அருகே உள்ள பக்தபுரி தெரு ரவுண்டானா பகுதிக்கு வந்தபோது கும்பகோணம் அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பு, தென்பாரத கும்பமேளா மகாமக அறக்கட்டளை, ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம், விசுவ இந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் திரண்டு நின்று சிலைகளுக்கு வரவேற்பு அளித்தனர். சிவனடியார்கள் சிவபூத இசைக்கருவிகளை இசைத்து வரவேற்பு அளித்தனர்.
பின்னர் போலீசார் அந்த 2 சிலைகளையும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஒப்படைத்தனர். சிலைகளை பார்வையிட்ட நீதிபதி, அந்த சிலைகளை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். அதன்படி 2 சிலைகளும் அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரனிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து 2 சிலைகளும், திருவையாறுக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கு லோகமாதேவி கட்டிய வடகயிலாயம் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் தஞ்சை பெரிய கோவிலுக்கு சிலைகள் கொண்டு வரப்பட்டன.
தஞ்சை பெரியகோவில் மராட்டா நுழைவாயில் முன்பாக சிலைகளுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ராஜராஜசோழன் நுழைவுவாயில் அருகே பரிவட்டம் கட்டப்பட்டு கும்ப மரியாதையுடன் சிலைகள் கோவிலின் உள்ளே, பெருவுடையார் சன்னதிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.
பின்னர் ராஜராஜசோழன், லோகமாதேவி சிலைகள் கோவிலின் உள்ளே தெற்கு பகுதியில், பெருவுடையார் சன்னதியை பார்த்தபடி மேற்கு நோக்கி தியாகராஜர் மண்டபம் எதிரே வைக்கப்பட்டது. அப்போது ராஜராஜசோழன், லோகமாதேவி சிலைகளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிலைகள் வைக்கப்பட்ட பின் அங்கு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் பார்வையிட்டார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், ஆர்.டி.ஓ. சுரேஷ், குடவாயில் பாலசுப்பிரமணியம், வக்கீல் யானை ராஜேந்திரன், தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story