பவானி அருகே டயர் வெடித்து நின்ற விலை உயர்ந்த பந்தய காரை காண திரண்ட பொதுமக்கள்


பவானி அருகே டயர் வெடித்து நின்ற விலை உயர்ந்த பந்தய காரை காண திரண்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 3 Jun 2018 3:45 AM IST (Updated: 3 Jun 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

பவானி அருகே டயர் வெடித்து நின்ற விலை உயர்ந்த பந்தய காரை காண பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பவானி,

ஈரோடு உள்பட தமிழ்நாட்டில் பல இடங்களில் செயல்படும் பிரபல நகைக்கடையின் உரிமையாளர் மகன் நேற்று கேரளாவில் இருந்து பெங்களூருக்கு விலை உயர்ந்த பந்தய காரான ‘லம்போர்கினி’யில் சென்றுகொண்டு இருந்தார். 3½ அடி உயரமும், 15 அடி நீளமும் கொண்ட இந்த கார் ரூ.4 கோடி என்று கூறப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே லட்சுமி நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது திடீரென காரின் வலதுபக்க பின்புற டயர் வெடித்தது. இதனால் கார் தடுமாறியபடி ரோட்டிலேயே நின்றுவிட்டது.

பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்ததால் அந்த வழியாக சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் காரை வேடிக்கை பார்க்க திரண்டு விட்டார்கள். சிலர் ரோட்டிலேயே வாகனங்களை நிறுத்தியபடி வேடிக்கை பார்த்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும், பவானி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்.

லம்போர்கினி வகை கார்களின் டயர்களை மாற்ற அங்கு வசதி இல்லாததால் மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு கார் கொண்டு செல்லப்பட்டது. அதன்பின்னர் அதில் வந்த நகை கடை உரிமையாளரின் மகன் வேறு காரில் பெங்களூரு புறப்பட்டு சென்றார்.


Next Story