ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்


ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்
x
தினத்தந்தி 3 Jun 2018 4:45 AM IST (Updated: 3 Jun 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

அத்தங்கிகாவனூர், சூரப்பூண்டி ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம் நடந்தது.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த அத்தங்கிகாவனூர் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு ஊத்துக்கோட்டை தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 16 மனுக்களை பெற்று கொண்டார்.

நிகழ்ச்சியில், வட்ட வழங்கல் அதிகாரி பிரித்தி, வருவாய் ஆய்வாளர்கள் மகேந்திரன், ரவி, கிராம நிர்வாக அதிகாரிகள் மகேந்திரன், பிரகாஷ், லட்சுமி, பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதியோர் உதவித்தொகை, ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், பட்டா கோருதல் உள்ளிட்ட 16 கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடம் இருந்து ஊத்துக்கோட்டை தாசில்தார் ரவிச்சந்திரன் பெற்று கொண்டார்.

இதில், 6 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 10 மனுக்கள் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடனடி தீர்வு காணப்பட்ட 6 மனுக்களுக்கு அதற்கான ஆணையை ஊத்துக்கோட்டை தாசில்தார் ரவிச்சந்திரன் பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார். முன்னதாக அனைவரையும் கிராம உதவியாளர்கள் சங்கர், ராஜேந்திரன் ஆகியோர் வரவேற்றனர். முடிவில், சரவணன் நன்றி கூறினார்.

காஞ்சீபுரம் மாவட்டம் எழிச்சூர் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் மலர்விழி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 17 மனுக்களை பெற்று கொண்டார். எழிச்சூர் ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் தேவேந்திரன் வருவாய் ஆய்வாளர் அரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், விதவை உதவித் தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டு மனை பட்டா கோருதல் உள்ளிட்ட 17 கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடம் இருந்து வட்ட வழங்கல் அலுவலர் மலர்விழி பெற்று கொண்டார். இதில் 4 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. 13 மனுக்கள் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டியை அடுத்த சூரப்பூண்டி ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் தாசில்தார் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் லலிதா, வருவாய் ஆய்வாளர் கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாபுராஜ், கிராம நிர்வாக அதிகாரி ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு உதவித்தொகை தொடர்பாக 18 மனுக்களும், வீட்டுமனை பட்டா கோரி 18 மனுக்களும், ஸ்மார்ட் கார்டு கோரி ஒரு மனுவும் என மொத்தம் 37 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 8 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவி சான்றிதழ்களை தாசில்தார் ராஜகோபால் வழங்கினார். முன்னதாக மாதர்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரி சம்பத் வரவேற்றார். முடிவில் கிராம உதவியாளர் வசந்தா நன்றி கூறினார்.

Next Story