வனவிலங்குகளுக்கு உணவு அளிக்கும் சுற்றுலா பயணிகள்: நடவடிக்கை எடுக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை


வனவிலங்குகளுக்கு உணவு அளிக்கும் சுற்றுலா பயணிகள்: நடவடிக்கை எடுக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 3 Jun 2018 3:00 AM IST (Updated: 3 Jun 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

முதுமலை புலிகள் காப்பக சாலைகளில் உலாவரும் வனவிலங்குகளுக்கு உணவு அளிக்கும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மசினகுடி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகள், காட்டு யானைகள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இதனால் வனவிலங்குகளையும், இயற்கை எழிலையும் காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் முதுமலைக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முதுமலையில் உள்ள வனத்துறை தங்கும் விடுதிகளிலும், மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளிலும் தங்குகின்றனர்.

சில சுற்றுலா பயணிகள் சுற்றி பார்த்த உடன் திரும்பி செல்கின்றனர். அவ்வாறு சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளை மசினகுடி பகுதியை சேர்ந்த சில தனியார் ஜீப் டிரைவர்கள் வனவிலங்குகளை காண்பிப்பதாக கூறி மசினகுடி–மாயார் சாலை, மசினகுடி–தெப்பக்காடு சாலை, மசினகுடி–சிங்காரா சாலைகளில் அழைத்து சென்று சாலையோரத்திற்கு வரும் வனவிலங்குகளை காண்பித்து வருகின்றனர். பகல் நேரங்களில் இந்த சாலைகளில் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்தும், இரவு நேரங்களில் செல்ல தடைவிதித்தும் வருகின்றனர். அத்துடன் இரவில் செல்லும் தனியார் ஜீப்கள் பிடித்து அபராதமும் விதிக்கபட்டு வருகிறது.

இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மாயார் சாலையில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் சில தனியார் ஜீப் டிரைவர்கள் சமீபகாலமாக சாலையோரத்திற்கு வரும் புள்ளி மான்களுக்கும், மயில்களுக்கும் பிஸ்கெட், வாழைப்பழம் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி வருகின்றனர். அத்துடன் ஜீப்களில் செல்லும் சுற்றுலா பயணிகளும் வனவிலங்குகளுக்கு உணவு அளிக்கின்றனர். அந்த உணவு பொருட்களை சாப்பிட்டு ருசி கண்ட வனவிலங்குகளும் தொடர்ந்து சாலையோரத்தில் யாராவது உணவு பொருட்களை அளிப்பார்களா? என காத்திருக்கும் அவல நிலையும் ஏற்பட்டு உள்ளது. பொதுவாக வனப்பகுதி வழியாக செல்பவர்கள் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தவும், மது அருந்தவும், வனவிலங்குகளை உணவு அளிப்பது மற்றும் அதனை தொந்தரவு செய்ய தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் மசினகுடி பகுதியில் உள்ள ஜீப் டிரைவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இதனை கடைபிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ள நிலையில் தற்போது வனவிலங்குகளுக்கு உணவு அளித்து வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே முதுமலை புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் இது போன்ற அத்துமீறும் செயல்களில் ஈடுபடும் வாகன டிரைவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story