நில ஆவணங்களில் கணினி திருத்தம் செய்ய சிறப்பு முகாம் 3 நாட்கள் நடைபெறுகிறது
ராமநாதபுரம் மாவட்டத்தில் நில ஆவணங்களில் கணினி திருத்தம் செய்ய சிறப்பு முகாம் 3 நாட்கள் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாக்களிலும் கடந்த மாதம் 15–ந்தேதி முதல் 24–ந்தேதி வரையிலான பணி நாட்களில் துணை கலெக்டர் நிலை மற்றும் அதற்கு கூடுதலான நிலை அலுவலர்கள் தலைமையில் வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை முகாம் நடைபெற்றது.
இந்த முகாம்களில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர். இதில் பட்டா ஆவணங்களில் கணினி திருத்தம் தொடர்பாக அதிகஅளவிலான மனுக்கள் வரப்பெற்றன. இதன்படி மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற திருவாடானை தாலுகாவுக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாய தணிக்கை முகாமில் பட்டா ஆவணங்களில் கணினி திருத்தம் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டு அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுஉள்ளது.
இதேபோல மீதமுள்ள 7 தாலுகாவிலும் வருகிற 5–ந்தேதி முதல் 7–ந்தேதி வரை 3 நாட்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நில ஆவணம் 10(1) சிட்டாவில் கணினி திருத்தம் செய்தல் தொடர்பான கோரிக்கை மனுக்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. குறிப்பாக ராமநாதபுரம் தாலுகாவில் மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமையிலும், முதுகுளத்தூர் தாலுகாவில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, கமுதி தாலுகாவில் பரமக்குடி சப்–கலெக்டர் விஷ்ணு சந்திரன், கீழக்கரை தாலுகாவில் மாவட்ட ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சுஜிபிரமிளா, கடலாடி தாலுகாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் மதியழகன், பரமக்குடி தாலுகாவில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் காளிமுத்து, ராமேசுவரம் தாலுகாவில் உதவி இயக்குனர் (நில அளவை) ஜெயக்குமார் ஆகியோர் தலைமையிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் வருவாய் கோட்டங்கள் வாரியாக சம்பந்தப்பட்ட பரமக்குடி சப்–கலெக்டர் மற்றும் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் மூலமாக உடனடி தீர்வு காணப்படும். எனவே பொதுமக்கள் இந்த முகாம்களை முழுமையாக பயன்படுத்தி பட்டா ஆவணங்களில் கணினி திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பான உடனடி தீர்வு பெற்று பயனடையலாம். இந்த தகவலை கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.