களிமண்குண்டு கிராமத்தில் ரே‌ஷன்கடை கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது ஒருவர் காயம்


களிமண்குண்டு கிராமத்தில் ரே‌ஷன்கடை கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது ஒருவர் காயம்
x
தினத்தந்தி 3 Jun 2018 3:00 AM IST (Updated: 3 Jun 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

திருப்புல்லாணி அருகே உள்ள களிமண்குண்டு கிராமத்தில் பழுதடைந்த பயன்படுத்தப்படாத ரே‌ஷன்கடை கட்டிட மேற்கூரை இடிந்துவிழுந்து ஒருவர் காயமடைந்தார்.

கீழக்கரை,

ராமநாதபுரம் திருப்புல்லாணி அருகே உள்ளது களிமண்குண்டு கிராமம். இந்த ஊரில் ரே‌ஷன்கடை கட்டிடம், மற்றும் டி.வி. அறை செயல்பட்டு வந்த கட்டிடம் பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றதால் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு அந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் உறுதித்தன்மை குறைந்துவிட்டதால் அதனை இடிக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை அந்த கட்டிடத்தின் அருகில் வசித்து வரும் பாண்டி(57) என்பவர் அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பழைய ரே‌ஷன்கடை கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் சிறிய துண்டுகள் பாண்டியின் தலையில் விழுந்ததால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே அவர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 1995–ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் பழுதடைந்து எந்த நேரமும் இடிந்துவிழும் நிலையில் உள்ளதாலும் இந்த கட்டிடத்தின் அருகில் பள்ளிக்கூடம் இருப்பதாலும், இங்கு மாணவ–மாணவிகள் விளையாடும் வழக்கம் உள்ளதாலும் விபரீதம் ஏற்படும்முன் உடனடியாக கட்டித்தை முழுமையாக இடித்து அகற்றவேண்டும் என்று கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story