வானூர் ஒன்றியத்தில் ரூ.1½ கோடியில் புதிய கட்டிடங்கள் - அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்


வானூர் ஒன்றியத்தில் ரூ.1½ கோடியில் புதிய கட்டிடங்கள் - அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 3 Jun 2018 5:00 AM IST (Updated: 3 Jun 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

வானூர் ஒன்றியத்தில் ரூ.1½ கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், அங்கன்வாடி மையம், ரேஷன் கடை ஆகிய கட்டிடங்கள் கட்டப்பட்டன.

இந்த கட்டிடங்களின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் ராஜேந்திரன், ஏழுமலை மற்றும் சக்கரபாணி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு, கொந்தமூர், ரங்கநாதபுரம், எறையூர், தென்கோடிப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ.17 லட்சம் மதிப்பிலும், கிளியனூர், வானூர், ஆகாசம்பட்டு ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ.14 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலும் கட்டப்பட்ட கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடங்களையும், ஆகாசம்பட்டு, எறையூர் ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகங்களையும், ரங்கநாதபுரம் ஊராட்சியில் ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும், திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் ரு.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடத்தையும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முரளி என்கிற ரகுராமன், விழுப்புரம் கோட்டாட்சியர் சரஸ்வதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story