சேறும்-சகதியுமாக காட்சியளிக்கும் ஜவகர் மில் பஸ் நிலையம் பயணிகள் அவதி


சேறும்-சகதியுமாக காட்சியளிக்கும் ஜவகர் மில் பஸ் நிலையம் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 3 Jun 2018 5:45 AM IST (Updated: 3 Jun 2018 5:45 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் பெய்த பலத்த மழையினால் சேறும்-சகதியுமாக ஜவகர்மில் பஸ் நிலையம் காட்சியளிக்கிறது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

சேலம்,

சேலம் புதிய பஸ் நிலையத்தின் 2-வது பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் தற்போது ஜவகர்மில் திடல் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. தினமும் ஏராளமான பயணிகள் அங்கிருந்து பஸ்களில் சென்று வருகின்றனர்.

சேலம் மாநகரில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. பின்னர் இரவு முழுவதும் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. தற்காலிக பஸ் நிலையமான ஜவகர்மில் திடலிலும் சில இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. மண் பகுதி என்பதால் பஸ் நிலையம் சேறும், சகதியுமாக காட்சியளித்தது. இதனால் பயணிகள் பஸ் நிலையத்துக்குள் நடக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர்.

குறிப்பாக குழந்தைகளுடன் மற்றும் அதிக பொருட்களை கொண்டு சென்ற பயணிகள் அவதியடைந்தனர். பயணிகள் பலர் பஸ் நிலையத்துக்குள் செல்லாமல் வெளிப்பகுதியிலேயே நின்று கொண்டு பஸ்களில் ஏறி பயணம் சென்றனர். எனவே பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் ஜவகர்மில் திடல் பஸ் நிலையத்தில் சேறும், சகதியும் மற்றும் மழைநீர் தேங்காதவாறும் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று காலை நிலவரப்படி சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆனைமடுவில் 56 மில்லி மீட்டர் மழை பெய்தது. மற்ற பகுதியில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- ஓமலூர்-44.2, சேலம்-35.2, ஆத்தூர்-21.4, கெங்கவல்லி-18.2, ஏற்காடு-15.8, தம்மம்பட்டி-11.4, கரியகோவில்-6, காடையாம்பட்டி-6, மேட்டூர்-4.4, பெத்தநாயக்கன்பாளையம்-4, வாழப்பாடி-2.4 ஆகும்.

Next Story