லஞ்ச வழக்கில் வனத்துறை அதிகாரி கைது


லஞ்ச வழக்கில் வனத்துறை அதிகாரி கைது
x
தினத்தந்தி 3 Jun 2018 5:46 AM IST (Updated: 3 Jun 2018 5:46 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெறுவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு லஞ்ச வழக்கில் வனத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.

மும்பை,

கோலாப்பூரில் வனத்துறை துணை பாதுகாவலர் அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் சதாசிவ் தியான்தேவ். இவர் நேற்றுமுன்தினம் ஓய்வுபெற இருந்தார். இந்தநிலையில், அவரிடம் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் சான்றிதழ் ஒன்று கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இதற்காக சதாசிவ் தியான்தேவ் அந்த நபரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சமாக கேட்டு உள்ளார். ஆனால் அந்த நபர் ரூ.1,500 தருவதாக தெரிவித்தார்.

இருப்பினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சதாசிவ் தியான்தேவை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதற்காக அந்த நபரிடம் ரூ.1,500-க்கான ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினார்கள். அதன்படி அவர் அதிகாரி சதாசிவ் தியான்தேவை சந்தித்து பணத்தை கொடுத்தார்.

அந்த பணத்தை வாங்கிய போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சதாசிவ் தியான் தேவை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் பணி ஓய்வு பெறுவதற்கு 2 மணி நேரமே இருந்த நிலையில் லஞ்ச வழக்கில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. 

Next Story