மந்திரி சுபாஷ் தேஷ்முக் பதவி விலக வேண்டும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்


மந்திரி சுபாஷ் தேஷ்முக் பதவி விலக வேண்டும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Jun 2018 6:00 AM IST (Updated: 3 Jun 2018 6:00 AM IST)
t-max-icont-min-icon

அரசு நிலத்தை ஆக்கிரமித்து பங்களா கட்டியதாக சர்ச்சையில் சிக்கிய மந்திரி சுபாஷ் தேஷ்முக் பதவி விலகவேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

மும்பை,

மராட்டியத்தில் பா.ஜனதாவை சேர்ந்த கூட்டுறவு துறை மந்திரி சுபாஷ் தேஷ்முக்குக்கு சொந்தமான பங்களா ஒன்று சோலாப்பூரில் உள்ளது. இந்தநிலையில் மந்திரியின் பங்களா அரசு நிலத்தை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருப்பதாக மும்பை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு இது குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சோலாப்பூர் மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து சோலாப்பூர் மாநகராட்சி கமிஷனர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில், மந்திரி சுபாஷ் தேஷ்முக்குக்கு சொந்தமான பங்களா தீயணைப்பு நிலையம் கட்டுவதற்காக அரசு ஒதுக்கீடு செய்த இடத்தில் அமைந்து இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. இது மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மந்திரி சுபாஷ் தேஷ்முக் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தின. இது குறித்து கருத்து கூறிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த், ‘மந்திரி சுபாஷ் தேஷ்முக்கின் சட்டவிரோத பங்களா மாநிலத்தின் ஊழல் ஆட்சியை வெளிப்படுத்தும் சிறந்த உதாரணம் ஆகும். இதனால் அவர் உடனடியாக பதவி விலகவேண்டும்’ என தெரிவித்தார்.

இதற்கிடையே தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மந்திரி சுபாஷ் தேஷ்முக், தன் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார். தனது பங்களா சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருப்பதை நிரூபித்தால் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வதோடு, அந்த பங்களாவை இடித்து தரை மட்டமாக்குவதாகவும் கூறினார். 

Next Story