தினம் ஒரு தகவல் : நீலவானம்


தினம் ஒரு தகவல்  : நீலவானம்
x
தினத்தந்தி 3 Jun 2018 10:29 AM IST (Updated: 3 Jun 2018 10:29 AM IST)
t-max-icont-min-icon

இரவில் வானம் பெரும்பாலும் இருட்டாகவே இருக்கும். அல்லது ஆங்காங்கே நட்சத்திரங்களை வாரித் தெளித்தது போலிருக்கும்.

மனிதச் செயல்பாடுகள் காரணமாக வானத்தில் பகலில் தூசுப்படலத்தையும், இரவில் ஒளிமாசையும் பெருநகரங்களுக்கு மேலே பார்க்க முடிகிறது. சிவப்பு நிற நியான் விளக்குகள் நம் நகரங்களில் அதிகம் பயன்படுத்தப்படுவதும் இதற்கு ஒரு காரணம்.

சூரிய ஒளி நிறப்பிரிகை அடைவதால் தோன்றும் வானவில்லில் அனைத்து வண்ணங்களும் இருக்கின்றன. வெள்ளை ஒளிதான் அப்படிப் பிரிகிறது. எனவே, வானமும் நமக்கு வெள்ளை நிறத்திலேயே தெரிய வேண்டும். ஆனால், ஏன் அப்படித் தெரிவதில்லை? வானம், வாயு மூலக்கூறுகளால் ஆனது.

வானத்தின் ஒரு பகுதியான வளிமண்டலத்தில் கோடிக்கணக்கான நுண்ணிய தூசுத் துகள்கள் பரவியிருக்கின்றன. அந்தத் துகள்கள் எவ்வளவு நுணுக்கமானவை என்றால், சாதாரண கண்களுக்குத் தெரியாத அளவுக்கு நுண்ணியவை. இந்த நுண்ணிய துகள்கள், எதிர்பாராதவிதமாக நீலநிற ஒளியின் அலை நீளத்துக்கு இணையாக இருக்கின்றன.

சூரியனின் ஒளி வளிமண்டலத்தில் நுழையும் போது, அதில் கலந்துள்ள பெரும்பாலான நிறங்கள் எந்த இடையூறும் இல்லாமல் பூமியின் மேற்பரப்பை வந்தடைந்து விடுகின்றன. ஆனால் நீல நிற ஒளி, வளிமண்டலத்தில் உள்ள துகள்களின் அலைநீளத்தை ஒத்திருப்பதால், அது எல்லா திசைகளிலும் சிதறடிக்கப்படுகிறது.

கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் நீளம் கொண்ட வளிமண்டத்தில் ஒவ்வொரு நுண்ணிய துகளிலும் நீலநிற ஒளி மோதிச் சிதறடிக்கப்பட்டு, கடைசியாக நம் கண்களை வந்தடையும் வரை துகள்களில் மோதிக் கொண்டே இருக்கிறது. இந்தக் காரணத்தால், வானத்தை எந்தப் பக்கத்தில் இருந்து நாம் பார்த்தாலும் அது நீல நிறமாகவே தெரிகிறது.

நமது பார்வை ஆழமடைய, ஆழமடைய வானம் அடர்நீலமாகத் தெரியும். அதனால்தான் தொடுவானப் பகுதியும், நம் தலைக்கு மேலே உள்ள பகுதியும் அடர்நீலமாகத் தெரிகின்றன. அலைநீளம் குறைவான ஊதா, கருநீலம் ஆகிய நிறங்கள் அதிகமாகச் சிதறடிக்கப்பட்டாலும், குறிப்பிட்ட சில நிறக்கதிர்களை பார்ப்பதற்கான உணர்திறன் நமது கண்களில் குறைவாக உள்ளது. அதனால் தான் நீல நிறம் மட்டும் நம் பார்வையில் ஆதிக்கம் செலுத்துகிறது.

மாலை அல்லது அதிகாலை வேளைகளில் சூரியன் மிகவும் தொலைவிலும், குறிப்பிட்ட அச்சில் சாய்ந்தும் இருப்பதால், சிதறடிக்கப்படும் நீலநிற ஒளி வேறு திசைக்குச் சென்றுவிடுகிறது. அப்போது வானம் மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறத்தில் தெரிவதாக நமக்கு தோன்றும். 

Next Story