எவரெஸ்ட்டில் ஏறிய இந்திய அழகி


எவரெஸ்ட்டில் ஏறிய இந்திய அழகி
x
தினத்தந்தி 3 Jun 2018 1:00 PM IST (Updated: 3 Jun 2018 12:34 PM IST)
t-max-icont-min-icon

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இந்தியாவின் முதல் வயதான பெண்மணி என்ற சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார், சங்கீதா சிந்தி பாஹ். இவருக்கு வயது 53.

கடந்த ஆண்டே சாதனை படைக்கும் முனைப்புடன் எவரெஸ்ட் சிகரத்தில் காலடி பதித்துவிட்டார். ஆனால் அவரால் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி பகுதிக்கு செல்ல முடியவில்லை. கடும் குளிர், பனியின் தாக்கத்துக்கு அவருடைய உடல் ஒத்துழைக்கவில்லை. நோய் பாதிப்புக்குள்ளாகி அவதிப்பட்டு தன்னுடன் சென்றிருந்த 6 பேரின் உதவியுடன் திரும்பி வந்துவிட்டார்.

முதல் முயற்சி தோல்வியில் முடிந்தாலும் எவரெஸ்டின் உச்சம் தொட்டே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். சமீபத்தில் தனது சாதனை ஆசையை நிறைவேற்றிவிட்டார். இந்தியாவின் வயதான பெண்மணி மட்டுமின்றி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து எவரெஸ்ட் சென்ற முதல் பெண்மணி என்ற சிறப்பையும் பெற்றுவிட்டார். சங்கீதா, 1985-ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா அழகி போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தேர்வானவர்.

‘‘வயது என்பது வெறும் எண் மட்டுமே. நமது கனவுகளுக்கு உயிரோட்டம் கொடுத்துக்கொண்டிருந்தால் எந்த வயதிலும் சாதிக்க முடியும். எவரெஸ்ட் உச்சத்தை எட்டியதும் உலகின் மேல் பகுதியில் நிற்பதாக உணர்ந்தேன். எதை பற்றியும் எனக்கு பயமில்லை. வாழ்க்கை மிக குறுகியது. அதனால் விரைந்து திட்டமிட்டு சாதிக்க வேண்டும்’’ என்கிறார்.

இதற்கு முன்பு இந்தியாவை சேர்ந்த பிரேம்லதா அகர்வால் 48 வயதில் எவரெஸ்ட் சிகரத்தை எட்டியதே சாதனையாக இருந்தது. அதனை சங்கீதா முறியடித்து விட்டார். ஜப்பானை சேர்ந்த தாமே வதனாபே என்ற பெண்மணி 2012-ம் ஆண்டு தனது 73- வது வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறியதே இன்றுவரை முதிர்ந்த உலக சாதனையாக இருக்கிறது. 

Next Story