இசையில் இளமை.. புதுமை.. இனிமை..


இசையில் இளமை.. புதுமை.. இனிமை..
x
தினத்தந்தி 3 Jun 2018 3:31 PM IST (Updated: 3 Jun 2018 3:31 PM IST)
t-max-icont-min-icon

இசையில் புது வடிவம் பூண்டு, இளைய தலை முறையை எளிதாக கவர்ந்து ரசிக்கவைக்கிறது ‘கவர்’ என்ற மாஷப்! இது இளமை பூத்துக்குலுங்கும் புதுமை நிறைந்த கலை வடிவம்.

யாராவது ஒரு பாடகி பாடிய மக்களை கவர்ந்த பாடல் ஒன்றை தேர்வு செய்துகொள்கிறார்கள். அந்த பாடலுக்கு சுயமாகவே புதிய கான்செப்ட் ஒன்றை உருவாக்குகிறார்கள். பின்பு அந்த பாடலை தனக்கு பிடித்ததுபோல் பாடி, இசை அமைத்து, தானே அந்த கான்செப்ட்டுக்காக நடிக்கவும் செய்து, படப்பிடிப்பு நடத்தி, அருமையாக தொகுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துவிடுகிறார்கள். அதை உலகளாவிய நிலையில் ரசிகர்கள் பார்த்து, ரசித்து, தங்கள் கருத்துக்களை பகிர்கிறார்கள். பலரையும் கவரும் இந்த ‘கவர் மாஷப்’பில் கலக்கிக் கொண்டிருக் கிறார், ஜனனி மதன்.

‘வான் வருவான்..’, ‘நீ பார்த்த பார்வை..’, ‘இதுவரை இல்லாத உறவு இது..’ ஆகிய மூன்று பாடல்களை இவர் தேர்வு செய்து பாடி, இசை அமைத்து, சினிமா காட்சி போன்று இமைகொட்டாமல் ரசிக்கும் அளவுக்கு படமாக்கியிருக்கிறார். வித்தியாசமான முறையில் ‘ரிவர்சில்’ காட்சிகளை அமைத்து, காதலில் ஆரம்பிக்கும் இந்த கவர் மாஷப் கல்யாணத்தில் நிறைவடைகிறது. அதில் அவரது நடிப்பும், நடனமும், காதல்வசப்படும் காட்சிகளும் பரவசப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இது போல் அவர் நிறைய கவர் மாஷப் வீடியோக்களை யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்துகொண்டிருக்கிறார். யூ-டியூப்பில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துகொண்டி ருக்கும் இவரை தேடிப்பிடித்தபோது இவர் சென்னைவாசி என்பதும், இவரும் சினிமாக்களில் பின்னணி பாடும் பிரபலம் என்பதும் தெரியவந்தது. கூடுதல் தகவல் இவர் பிரபல நகைச்சுவை நடிகர் மதன்பாப்பின் மகள்.

கலையையும், கலாசாரத்தையும் புதுமையான முறையில் காட்சிப்படுத்தும் புதிய கவர் மாஷப் ஒன்றை உருவாக்க, தற்போது தனது சகோதரர் அர்சித்துடன் இணைந்து ஜனனி மதன் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அதற்காக உக்லே என்ற வித்தியாசமான இசைக் கருவியை அவர் இசைத்துக்கொண்டிருக்க, அருகில் சிறுமி ஒருவர் அமர்ந்து அற்புதமாக பாடிக் கொண்டிருந்தார். அந்த சிறுமி அவரது நான்கு வயது மகள் பார்வதி. அந்த பணிக்கு இடையே தனது இசைப் பயணம் பற்றி ஜனனி மதன் நம்மோடு உற்சாகமாக உரையாடினார்!

“எனது தாயார் சுசிலா கர்நாடக இசைப் பாடகி. சினிமாவிலும் பின்னணி பாடியிருக்கிறார். எனது தந்தையும் இசையில் தேர்ச்சி பெற்றவர். அதனால் நானும் ஐந்து வயதிலேயே பாடுவதற்கு மேடை ஏறிவிட்டேன். கர்நாடக இசையை பின்னி கிருஷ்ணகுமாரிடம் கற்றுக்கொண்டிருக்கிறேன். அகஸ்டினிடம் மேற்கத்திய இசை கற்றேன். இந்துஸ்தானி, கசல், ஓப்ரா போன்ற இசை வகைகளிலும் தேர்ச்சி பெற்றேன். ஓப்ரா என்பது ஐரோப்பிய நாடுகளின் இசை. உச்சஸ்தாயியில் தம் பிடித்து அதை பாடவேண்டும். அதில் ஒரு கதை இருக்கும். சில நேரங்களில் பின்னணியில் நாடகம் போன்று காட்சிகளும் இடம்பெறும். ஓப்ரா இசையி்ல் இத்தாலி மொழி பாடலைப் பாட எனக்கு பிடிக்கும். அதனால்தான் அதை ஆர்வமாக கற்றுக்கொண்டேன். நமது குரல் ஒரு கருவி போன்றது. பல்வேறு இசைகள் மூலம் நாம் எந்த அளவுக்கு பயிற்சி கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு நமது குரல் சக்திமிக்கதாக மாறும்..” என்று கூறும் ஜனனி, பல்வேறுவிதமான கலைகளில் தேர்்ச்சி பெற்று கலைநாயகியாகவும் வலம் வருகிறார்.

“சிறுவயதில் பரதம் கற்றேன். பின்பு ஜாஸ், பாலே போன்ற நடனங்களை கற்றுக்கொண்டேன். நான் கற்ற நடனங்கள், என் உடலை எப்போதும் உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. நான் உருவாக்கும் மாஷப்களில் என் நடனம் சிறப்பாக இருப்பதாக பலரும் பாராட்ட அதுதான் காரணம். இசைக் கருவிகளை பொருத்தவரையில் கிட்டார், உக்லே, கீ போர்டு ஆகியவைகளை இசைப்பேன். இதுவரை 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இசைப்பயணம் மேற்கொண்டிருக்கிறேன். ஆயிரத்திற்கு மேற்பட்ட மேடைகளில் பாடியிருக்கிறேன். எனது தந்தை நடத்தும் மதன் உட்சவ் என்ற இசைக் கலை நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றிருக்கிறேன்” என்று சொல்லும் இவர், சிறந்த ஓவியர் மற்றும் நீச்சல் வீராங்கனையாகவும் திகழ்கிறார்.

“பத்து வயதில் இருந்து இப்போதும் நான் நீச்சல் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கிறேன். ஒரு மணி நேரம்கூட தொடர்ச்சியாக ஓய்வின்றி நீச்சல் அடிப்பேன். ஆனால் எனக்கு அதில் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதில்லை. அதுபோல் பளுதூக்குதல், யோகா செய்தல், ஓடுதல், ஜிம் பயிற்சி போன்றவைகளில் இப்போதும் ஈடுபடுகிறேன். பெண் களுக்கு ஆரோக்கியமும், கட்டுடலும் மிக அவசியம். இவை இருந்தால்தான் பெண் களால் சாதனை என்ற அடுத்தகட்டத்தை நோக்கி முன்னேறிச்செல்ல முடியும்” என்று இளமைத் துடிப்புடன் சொல்கிறார்.

ஜனனி திரை இசையிலும் பிரபலமாக வலம் வந்தவர். “நான் `வீராப்பு' என்ற படத்தில், இமான் இசையில் ‘போனால் வருவீரோ.. வந்தால் இருப்பீரோ.. சண்டாளன் உன் நினைவாலே சருகாக நான் உருகுறேனே..’ என்ற பாடலை பாடினேன். அந்த பாடலில் கிராமத்து பெண்கள் கணவரை நாசுக்காக மிரட்டுவது போன்ற வரிகள் வரும். அவை கிராமத்து பெண்களை நன்றாக கவர்ந்திருக்கிறது. நான் எங்கு கச்சேரிகளுக்கு சென்றாலும், அந்த பாடலை பாடுவேன். நிகழ்ச்சி முடிந்ததும் பெண்கள் அந்த பாடல் வரிகளை குறிப்பிட்டு என்னை பாராட்டுவார்கள். விஜய், தனுஷ் படங்கள் உள்பட 100-க்கு மேற்பட்ட படங்களுக்கு 150 பாடல்கள் வரை பாடியிருக் கிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி சினிமாக்களுக்கு பாடியுள்ளேன்.

பின்னணி பாடலில் நான் முன்னணி இடத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது பெற்றோர் திருமணம் செய்துவைத்தார்கள். எனது கணவர் சுப்பிரமணியன் மார்க்கெட்டிங் கன்சல்டன்ட்டாக பணிபுரிகிறார். நான் உருவாக்கிய கவர் மாஷப்பில் என் காதலராகவும், கணவராகவும் அவர்தான் ேதான்றுகிறார். நான் கர்ப்பிணியானதும் சினிமாவில் பாடுவதை குறைத்துக்கொண்டு தாய்மையை அனுபவித்தேன். பார்வதி பிறந்த பின்பு என் முழு நேரத்தையும் அவளுக்காக செலவிட்டேன்.

அதற்கு காரணம் இருக்கிறது. என் அம்மா இசைத் துறையில் குறிப்பிடத்தக்கவராக இருந்தபோதும், நான் பிறந்ததும் அவர் இசையில் இருந்து ஒதுங்கி, என்னை வளர்ப்பதில் முழு கவனம் செலுத்தினார். அதனால்தான் என்னால் இந்த அளவுக்கு முன்னேற முடிந்தது. அதுபோல் என் குழந்தையும் வளர்க்கப்படவேண்டும் என்று விரும்பினேன். அதனால் திரை இசைக்கு தற்காலிக விடைகொடுத்தேன். அந்த காலகட்டத்தில்தான் மாஷப் படைப்புகளை உருவாக்கினேன். இப்போது மகள் வளர்ந்து அவளும் பாடத் தொடங்கிவிட்டாள். அதனால் மீண்டும் புதுவேகத்தில் பின்னணி பாட வந்திருக்கிறேன். சினிமாவில் அதற்கான வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன.

எனது அண்ணன் அர்சித்தும் நிறைய சினிமாக்களுக்காக பாடியிருக்கிறார். அவர் குறும்படங்களும் இயக்கியுள்ளார். சுத்தத்தை கடைப்பிடிக்க ெபாதுமக்களிடம் விழிப் புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் அவர், ‘துப்புர மணி துப்பாதே நீ..’ என்ற பாடலை எழுதி இசை அமைத்து பாடி படமாக்கினார். பொதுஇடங்களில் எச்சில் துப்பக்கூடாது என்பதை வலியுறுத்தும் அந்த பாடலுக்கு நானும் நடனமாடி இருக்கிறேன். அந்த பாடல் காட்சியை சென்னை கார்ப்ப ரேஷன் அண்ணனிடமிருந்து பெற்று பள்ளிகளிலும், பொது இடங்களிலும் ஒளிபரப்பு செய்துகொண்டிருக்கிறது. இது பாரத பிரதமரின் தூய்ைம இந்தியா திட்டத்திற்கு வலுசேர்ப்பதாக அமைந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அதை பார்த்து விழிப்படைந்திருக்கிறார்கள். இதை ஒரு சமூகத் தொண்டாக எங்கள் குடும்பத்தின் சார்பில் செய்திருக்கிறோம்” என்று கூறும் ஜனனியிடமிருந்து பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்வியல் விஷயங்களும் நிறைய இருக்கின்றன.

“நான் தினமும் அதிகாலை 4 மணிக்கு விழித்துவிடுவேன். பிரஷ் செய்துவிட்டு ஒரு லிட்டர் தண்ணீர் பருகுவேன். பின்பு விளக்கேற்றிவிட்டு என் பணிகளை தொடங்குவேன். விளக்கேற்றிவிட்டு வேலைகளை தொடங்கினால் அந்த நாள் வெற்றிகரமாக அமையும். அதிகாலை 4 முதல் 6 மணி வரையிலான நேரத்தை ஒவ்வொரு ெபண்ணும் தங்களுக்காக செலவிட்டு அனுபவித்து ரசிக்கவேண்டும். அது ெபண்களுக்கான நேரம். அந்த நேரத்தில் போன் வராது. யாருடைய தொந்தரவும் இருக்காது. சுற்றுப்புற சூழலும் மிக அமைதியாக இருக்கும். அந்த நேரத்தில் நான் இசை சாதகம் செய்வேன். 6 மணிக்கு மேல் பால் சேர்க்காத ஒரு கப் காபி பருகிவிட்டு மெரினா பீச்சிற்கு செல்வேன். 6 கி.மீ. தூரம் ஓடுவேன். தினமும் இரண்டு மணி நேரத்தை உடற்பயிற்சிக்காக செலவிடுகிறேன். பிரசவமாகியிருந்த நேரத்தில் என் கணவரே என்னை உடற்பயி்ற்சிக்கு அழைத்துசெல்வார். எங்கள் குடும்பத்தில் தந்தை உள்பட நாங்கள் அனைவருமே உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும்” என்கிறார்.

ஜனனி மதனை இசை உற்சாகமாக, மகிழ்ச்சியாக, இளமைத்துடிப்போடு வைத்திருக்கிறது. இசை சார்ந்த படைப்புப் பணிகளில் ‘பிசி’யாக இருக்கும் இவர், இசைக்காக தனது உணவில் மட்டும் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கிறார். குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்கிறார். இவரது மகள் பார்வதி இப்போதே ேமடை ஏறிவிட்டார். ‘அஞ்சலி.. அஞ்சலி..’ என்ற இவரது மழலைக் குரல் பாடலுக்கு ரசிகர் களின் கரகோஷம் நிறையவே கிடைத்துக்கொண்டிருக்கிறது. மூன்றாவது தலைமுறையாக இவர்களது இசைப் பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. 

Next Story