பழனி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள கண் டாக்டர் பணியிடம் நிரப்ப வேண்டும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய்க்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஒரு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
பழனி,
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2–வது பெரிய மருத்துவமனையாக பழனி அரசு மருத்துவமனை செயல்படுகிறது. பழனி, கீரனூர், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் பழனி அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்களில் கண் பார்வை குறைபாடுக்கு சிகிச்சை பெறுவதற்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்களில் மாற்றுத்திறனாளிகளும் அடக்கம். கண் நோய் தொடர்பான சிகிச்சை அளிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த டாக்டர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றுவிட்டார்.
அதன் பிறகு அந்த பணியிடம் தற்போது வரை நிரப்பப்படவில்லை. இதனால் பழனி நகரை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் கண் டாக்டர் பணியிடம் நிரப்பப்படாததால் கண் பாதிப்புடைய மாற்றுத்திறனாளிகள் அரசு உதவி பெறுவதற்கான விண்ணப்பத்தில் சம்பந்தப்பட்ட டாக்டரிடம் கையொப்பம் பெற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் பழனி அரசு மருத்துவமனைக்கு கண் டாக்டர் நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.