கண்டமனூர் பகுதியில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு
கண்டமனூர் பகுதியில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
கண்டமனூர்,
தேனி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் மணல் அள்ளுவதற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி அனுமதிச்சீட்டு பெற்ற பலர் மணல் அள்ளி வந்தனர். ஆனால் கண்டமனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் மணல் அள்ளுவதில் விதிமுறைகள் மீறப்படுவதாக புகார் எழுந்தது.
குறிப்பாக, அனுமதி பெற்ற அளவை காட்டிலும் கூடுதலாக மணல் அள்ளி வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது. கிணறுகளின் நீர்மட்டம் குறைந்து விட்டது. இதன் காரணமாக விவசாயம் கேள்விக்குறியாக உள்ளது. இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில், நீர்நிலைகளில் மணல் அள்ள வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார்.
இதன் எதிரொலியாக பொட்டிபுரம் உள்ளிட்ட சில இடங்களில் மணல் அள்ளப்படவில்லை. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். அதேநேரத்தில், அனுமதியின்றி மணல் அள்ளுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குறிப்பாக கண்டமனூரின் தெற்கு ஒடை, புதுராமசந்திராபுரம் கிழக்கு ஒடைப்பகுதிகள் மற்றும் வைகை ஆற்று படுகைகளில் இரவு 10 மணிக்கு மேல் மணல் அள்ளப்பட்டு வருகிறது. தினமும் 50–க்கும் மேற்பட்ட வாகனங்களில் மணல் அள்ளி சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக வருவாய்த்துறை, கனிமவளத்துறை, போலீசாரிடம் அப்பகுதி மக்கள் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் புகார் கொடுத்தவர்களை, ரவுடிகள் சிலர் மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் புகார் கொடுக்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையே சில அதிகாரிகள், மணல் அள்ளுவோருக்கு உடந்தையாக இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே இந்த பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, அனுமதியின்றி மணல் அள்ளுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.