வைகை அணையில் மூழ்கி தனியார் நிறுவன பாதுகாப்பு அதிகாரி பலி
ஆண்டிப்பட்டி அருகே வைகை அணையில் மூழ்கி தனியார் நிறுவன பாதுகாப்பு அதிகாரி பரிதாபமாக இறந்தார். 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள எண்டப்புலி புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணி புரிந்து வந்தார். இவருக்கு, கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. அவருடைய மனைவி கவுசல்யா (25). கர்ப்பிணியான இவர், சுரேசுடன் சென்னையில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் தனது உறவினர் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வேளச்சேரியை சேர்ந்த லோகநாதன் (28), கிண்டியை சேர்ந்த மற்றொரு சுரேஷ் (31) ஆகியோருடன் சொந்த ஊருக்கு சுரேஷ் வந்தார். ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை புதூர் என்னுமிடத்தில் நடந்த திருமணத்தில் தனது நண்பர்களுடன் சுரேஷ் பங்கேற்றார்.
அதன்பின்னர், தனது நண்பர்களுடன் வைகை அணையில் சுரேஷ் குளித்தார். அப்போது, அணையின் ஆழமான பகுதிக்கு சுரேஷ் சென்று விட்டார். திடீரென அவர் தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்ட அவருடைய நண்பர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சல் போட்டனர்.
பின்னர் இதுகுறித்து வைகை அணை போலீஸ் நிலையத்துக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி தீயணைப்பு படையினரும் அங்கு வந்தனர். பின்னர் தீயணைப்பு படையினர், பொதுமக்கள் உதவியுடன் அணையில் இறங்கி சுரேசை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு சுரேசின் உடல் மீட்கப்பட்டது. தண்ணீரில் மூழ்கி அவர் பலியாகி இருப்பது தெரியவந்தது. இறந்த சுரேசின் உடல் கரைக்கு கொண்டு வரப்பட்டது. அதனை கண்டு உறவினர்கள் கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வைகை அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அணையில் மூழ்கி பலியான சுரேசுக்கு இன்று (திங்கட்கிழமை) முதலாம் ஆண்டு திருமண நாள் ஆகும். இதனை, சென்னையில் உள்ள தனது மனைவியுடன் கொண்டாட அவர் திட்டமிட்டு இருந்தார். இதற்காக நேற்று இரவு தனது நண்பர்களுடன் சென்னை செல்ல சுரேஷ் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் அணையில் மூழ்கி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வைகை அணையின் நீர்த்தேக்க பகுதியில் குளிக்கக்கூடாது என்று பொதுப்பணித்துறை சார்பில் ஆங்காங்கே எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், எச்சரிக்கையை மீறி சுற்றுலா பயணிகள் அணையில் குளித்து தங்களது உயிரை இழந்து வருகின்றனர். எனவே சுற்றுலா பயணிகள் அணையில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் அணையின் நீர்த்தேக்க பகுதிக்குள் அத்துமீறி செல்வோரை பொதுப்பணித்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.