குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பான ஆய்வு கூட்டம்


குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பான ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 4 Jun 2018 4:45 AM IST (Updated: 4 Jun 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சார்பாக குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சார்பாக குடிநீர் வினியோகம் தொடர்பான ஆய்வுகூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, திருவள்ளூர் எம்.பி. வேணுகோபால் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 526 ஊராட்சிகள் , 5 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சி பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஊராட்சி பகுதிகளில் 526 கிராம ஊராட்சிகள் மற்றும் 3 ஆயிரத்து 862 குக்கிராமங்கள் உள்ளது. நாள்தோறும் இந்த பகுதிகளுக்கு கைப்பம்புகள், விசைப்பம்புகள், சிறு மின்விசை பம்புகள் மூலம் 3 ஆயிரத்து 771 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அவற்றை முறையாக மண்டல துணை தாசில்தார் மூலம் தங்கு தடையின்றி வினியோகம் செய்யப்படுவதை தினமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பழுது ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் புகார் தெரிவிக்கப்பட்டு விரைவாக பழுது பார்க்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு ஆழ்துளை கிணறுகளை ஆழப்படுத்துதல், சுத்தப்படுத்துதல், குடிநீர் வினியோகம் செய்யும் குழாய்களை விரிவாக்கம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள அரசுக்கு திட்டமதிப்பீடுகளும் வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி பகுதிகள் சார்பாக மொத்தம் உள்ள 135 வார்டு பகுதிகளிலும் பொதுக்குழாய்கள், நகராட்சி குடிநீர் வினியோக லாரிகள் மற்றும் தனியார் லாரிகள் மூலமாக நாள்தோறும், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் கோடை காலத்தில் பற்றாக்குறையை சமாளிக்க நகராட்சிகளில் பொதுநிதித்திட்டம், குடிநீர் அபிவிருத்தி திட்டம் போன்றவைகள் மூலம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பேரூராட்சிகள் சார்பாக மொத்தமுள்ள 165 வார்டுகளில் 18 ஆயிரத்து 85 வீட்டு குடிநீர் இணைப்புகள் , 3 ஆயிரத்து 544 பொது குழாய் இணைப்புகள் ஆகியவற்றின் மூலம் குடிநீர் வினியோகம் சீராக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் பற்றாக்குறையை தவிர்ப்பதற்கான புதிய திட்டங்களும், பேரூராட்சிகளின் பொதுநிதித்திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி போன்றவைகள் மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது.

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடுகள் ஏற்படாதவாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தினமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைத்து வகையான குடிநீர் தொடர்பான புகார்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையின் இலவச தொலைபேசி எண் 1077 மூலம் பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்கலாம் என ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பொன்னேரி தொகுதி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன், கும்மிடிப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் எஸ்.எஸ்.குமார், நகராட்சிகளின் ஆணையர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சிகளின் செயல்அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த திரளான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story