சட்ட போராட்டம் நடத்தி காவிரி பிரச்சினையில் தமிழக அரசு வெற்றி பெற்றுள்ளது அமைச்சர் பேச்சு


சட்ட போராட்டம் நடத்தி காவிரி பிரச்சினையில் தமிழக அரசு வெற்றி பெற்றுள்ளது அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 4 Jun 2018 4:15 AM IST (Updated: 4 Jun 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

காவிரி பிரச்சினையில் தமிழக அரசு சட்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளது என அமைச்சர் காமராஜ் கூறினார்.

குடவாசல்,

திருவாரூர் மாவட்டம், குடவாசல் பேரூராட்சியில் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். நாகை டாக்டர் கே.கோபால் எம்.பி., தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ரவிச்சந்திரன், உதவி கலெக்டர் முருகதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ. பாப்பா.சுப்பிரமணியன், கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

விழாவில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு பஸ் நிலைய கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக குடவாசல் அரசு கலைக்கல்லூரி, அரசு நேரடி கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்யும் நெல்லை பாதுகாக்க சேமிப்பு கிடங்கு போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி உள்ளது.

அதேபோல குடவாசல் பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்ல வசதிகள் குறைவாக உள்ளதால் அரசிடம் எடுத்து கூறி ரூ.1 கோடியே 60 லட்சம் செலவில் புதிய பஸ் நிலையம் அமைக்க அனுமதி பெற்று கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து பஸ்களும், பஸ் நிலையத்திற்கு வந்து பயணிகள் சிரமம் இல்லாமல் இறக்கி விட போதிய வசதி செய்யப்படும். மேலும், பயணிகள் அமர இருக்கைகள் அமைக்கப்படும்.

தமிழக அரசு பல்வேறு சட்ட போராட்டம் நடத்தி காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து அதனை மத்திய அரசிதழில் வெளியிட்டு காவிரி பிரச்சினையில் வெற்றி பெற்றுள்ளது. இனி நமக்கு காவிரியில் சட்டப்படி கிடைக்க கூடிய தண்ணீர் விரைவில் கிடைக்கும். வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை ஆணையம் விரைவில் செயல்பட்டு அதன் அதிகாரத்தை செயல்படுத்தி தண்ணீரை பெற்று தரும்.

தற்சமயம் மேட்டூர் அணையில் 38 அடி தண்ணீர் உள்ளது. 90 அடிக்கு குறையாமல் இருந்தால் தான் முழுமையாக குறுவை சாகுபடி செய்ய முடியும். எனவே சூழ்நிலைக்கு ஏற்ப தண்ணீர் திறந்துவிட அரசு நடவடிக்கை எடுக்கும். எனவே மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு நடைபெறும் அ.தி.மு.க. அரசுக்கு பொதுமக்கள் என்றும் துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) திரு.விஸ்வநாதன், உதவி பொறியாளர் திருச்செல்வம், செயல் அலுவலர் சமயசந்திரன், த.மா.கா. மாவட்ட தலைவர் தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story