ஸ்கூட்டரில் சென்ற பெண் போலீசிடம் 12 பவுன் சங்கிலி பறிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு


ஸ்கூட்டரில் சென்ற பெண் போலீசிடம் 12 பவுன் சங்கிலி பறிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 4 Jun 2018 3:45 AM IST (Updated: 4 Jun 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் ஸ்கூட்டரில் சென்ற பெண் போலீசிடம் 12 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

திருவாரூர்,

திருவாரூர் விளமல் தியாகராஜர் நகரை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 38). இவர் கொரடாச்சேரி போலீஸ்நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு ராஜேஸ்வரி திருவாரூர் பை-பாஸ் சாலையில் உள்ள வர்த்தக சங்க மண்டபத்தில் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் 10 மணியளவில் திருமண மண்டபத்தில் இருந்து ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது விளமல் கல்பாலம் அருகே சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் ராஜேஸ்வரி கழுத்தில் கிடந்த 12 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

கோரிக்கை

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் பவித்திரமாணிக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றுவிட்டனர். திருவாரூர் நகரில் தொடர் சங்கிலி பறிப்பால் பெண்கள் பீதியடைந்துள்ளனர். எனவே சங்கிலி பறிப்பை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியினையும், வாகன சோதனையையும் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெண் போலீஸ் ஒருவரிடம் மர்மநபர்கள் 12 பவுன் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story