கோத்தகிரி அருகே பகுதி நேர ரே‌ஷன் கடை திறப்பு


கோத்தகிரி அருகே பகுதி நேர ரே‌ஷன் கடை திறப்பு
x
தினத்தந்தி 4 Jun 2018 3:45 AM IST (Updated: 4 Jun 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே உள்ள பையங்கி கிராம பகுதியில் புதியதாக பகுதி நேர ரே‌ஷன் கடையை குன்னூர் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

கோத்தகிரி,

கோத்தகிரி தாலுக்காவிற்குட்பட்ட பகுதியில் முழு நேர மற்றும் பகுதிநேர கடைகள் என மொத்தம் 63 ரே‌ஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெத்தளா, கல்லட்டி, மற்றும் பையங்கி கிராம மக்கள் பெத்தளா பகுதியில் செயல்பட்டு வரும் ரே‌ஷன் கடையிலேயே அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயனடைந்து வந்தனர்.

பெத்தளா ரே‌ஷன் கடையில் ஒரே நேரத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வருவதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும் பையங்கியிலிருந்து சுமார் 4 கிலோமிட்டர் தொலைவிற்கு வனப்பகுதி வழியாக கிராம மக்கள் நடந்து சென்று ரே‌ஷன் பொருட்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது.

பையங்கி கிராம மக்கள் காலை 7 மணி முதல் காத்திருந்து பொருட்களை வாங்க வேண்டிய நிலை இருந்ததால், அன்றைய தினம் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே பையங்கி கிராமத்தில் புதியதாக பகுதி நேர ரே‌ஷன் கடை ஒன்றை திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்

இதனைத் தொடர்ந்து பையங்கி பகுதியில் புதியதாக ரே‌ஷன் கடை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பையங்கி ஊர் தலைவர் ஹிரியன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சார்பதிவாளர் அய்யனார், பொதுவினியோக திட்ட சார்பதிவாளர் மணிகண்டன், மேலாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் குன்னூர் எம்.எல்.ஏ சாந்திராமு கலந்து கொண்டு புதிய ரே‌ஷன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் ஊர்பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த பகுதி நேர ரே‌ஷன் கடை வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் செயல்படும். மேலும் பையங்கி கிராமத்தில் உள்ள 125 ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு இந்த ரே‌ஷன் கடை மூலமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story