பந்தலூர் அருகே காலி குடங்களுடன் குடிநீர் தேடி அலையும் கிராம மக்கள்


பந்தலூர் அருகே காலி குடங்களுடன் குடிநீர் தேடி அலையும் கிராம மக்கள்
x
தினத்தந்தி 4 Jun 2018 3:45 AM IST (Updated: 4 Jun 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே மின்மோட்டார் பழுதானதால் காலிகுடங்களுடன் கிராம மக்கள் குடிநீர் தேடி அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பந்தலூர்,

பந்தலூர் பிதிர்காடு அருகே காமராஜ்நகர் உள்ளது. இங்கு சுமார் 100 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். நெலாக்கோட்டை ஊராட்சியின் சார்பில் இந்த கிராம மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கிணறு அமைக்கப்பட்டு, அங்கிருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் பம்ப் செய்யப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இங்குள்ள மின்மோட்டார் பழுதாகி உள்ளது.

இதன்காரணமாக இந்த கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே பழுதாகி உள்ள மின்மோட்டாரை சீரமைத்து தரும்படி ஊராட்சி நிர்வாகத்திற்கு கிராம மக்கள் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

இந்த நிலையில் நெலாக்கோட்டை ஊராட்சி நிர்வாகம் சார்பில் காமராஜ் நகரில் வசிக்கும் கிராம மக்களுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரை பிடிக்க பொதுமக்கள் ஒரே நேரத்தில் முயல்வதால் தள்ளு, முள்ளு ஏற்படுகிறது.

மேலும் அனைவருக்கும் போதுமான அளவுக்கு குடிநீர் கிடைப்பது இல்லை. வேலைக்கு செல்பவர்கள் குடிநீர் லாரி வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தங்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய காலி குடங்களுடன் அருகில் உள்ள நீர்நிலைகளை தேடி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளதாக இந்த கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.

இந்த கிராமத்தை சுற்றிலும் வனப்பகுதியாக உள்ளதால், குடிநீர் எடுக்க செல்பவர்களை வன விலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே பழுதான மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story