ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் கைகூலிகளே தூத்துக்குடி கலவரத்திற்கு காரணம் பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் கைகூலிகளே தூத்துக்குடி கலவரத்திற்கு காரணம் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் குற்றம் சாட்டி உள்ளார்.
ராமநாதபுரம்,
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:– கச்சநத்தம் பகுதியில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டுஉள்ளனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. அதில் உரிய நடவடிக்கையை போலீஸ் எடுத்திருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்கலாம். காவல்துறை முற்றிலுமாக தன் கடமையை செய்ய தவறிவிட்டது. ஐகோர்ட்டு மேற்பார்வையில் அங்கு புலன்விசாரணை நடத்தப்பட வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் மேலாண்மை வாரிய தலைவர், உறுப்பினர்களை மத்திய அரசு நியமிப்பதற்கு முன்னர் தமிழகம் உள்ளிட்ட 4 மாநில அரசுகளையும் கலந்து பேசித்தான் நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுஉள்ளது. அதற்கு ஏற்ப கலந்து பேசி நியமிக்க வேண்டும். தன்னிச்சையாக தற்காலிகமாக யாரையும் நியமிக்கக்கூடாது. பருவகாலம் தொடங்கிவிட்டதால் வருகிற 12–ந்தேதி மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு உள்ளதால் அதற்கு முன்னதாக மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு நீர் வழங்கப்பட வேண்டும்.
தூத்துக்குடியில் திட்டமிட்டே படுகொலையை காவல்துறை நடத்தி உள்ளது. 99 நாட்களாக அறவழியில் போராடிய மக்கள் 100–வது நாள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட குடும்பத்துடன் பெண்களுடன் ஊர்வலமாக வருகிறார்கள். அவ்வாறு வருபவர்கள் எவ்வாறு கலவரம் செய்வார்கள். ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் இந்த போராட்டத்தினை பிளவு படுத்துவதற்கு, சீர்குலைப்பதற்கு பல வழிகளிலும் முயற்சி செய்து வந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு நிதி வழங்கி உள்ளனர். அதுமட்டுமல்ல உயர் அதிகாரிகளுக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் நிதி தாராளமாக வழங்கி உள்ளனர்.
அதன்பின்னரே இந்த கலவரத்தை ஆலை நிர்வாகம் தங்களின் கைகூலிகள் மூலம் திட்டமிட்டு நடத்தி உள்ளது. அதனை வாய்ப்பாக பயன்படுத்தி காவல்துறை அப்பாவி மக்களை சுட்டு கொன்று இருக்கிறது. காவல்துறை சீருடையில் சுடாமல் மாற்று உடையில் சென்று சுடவேண்டிய அவசியம் என்ன. அதில் ஒளிந்துள்ள மர்மம் வெளிச்சத்திற்கு வரவேண்டும். இதனை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரித்து வெளிக்கொண்டுவரவேண்டும். மாற்று உடையில் துப்பாக்கியால் சுட்டவர்கள் மீது கொலை குற்ற வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊருவியதாக முதல்–அமைச்சர் கூறியுள்ளது வெட்கக்கேடானது. சமூகவிரோதிகள் மக்கள் போராட்டத்தில் ஊடுருவாமல் தடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை. அந்த கடமையை காவல்துறை செய்ய தவறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பொது செயலாளர் பசுமலை, மாவட்ட தலைவர்கள் ராமநாதபுரம் நாகேசுவரன், சிவகங்கை சுந்தர்ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.