தேவகோட்டை–திருச்சி இடையே இயக்கப்பட்ட அரசு பஸ் நிறுத்தம்; மாணவ–மாணவிகள் கடும் அவதி


தேவகோட்டை–திருச்சி இடையே இயக்கப்பட்ட அரசு பஸ் நிறுத்தம்; மாணவ–மாணவிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 4 Jun 2018 4:00 AM IST (Updated: 4 Jun 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை– திருச்சி இடையே ஆத்தங்குடி வழியாக இயக்கப்படும் அரசு விரைவு பஸ் நிறுத்தப்பட்டதால் மாணவ–மாணவிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதி கிராம மக்கள் சரக்கு வாகனங்களில் செல்லும் அவலம் நடந்து வருகிறது.

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ளது ஆத்தங்குடி கிராமம். முத்துப்பட்டி ஊராட்சி, ஆற்காடுவெளுவூர், அரண்மனைப்பட்டி ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இது தவிர சுற்றுலாத்தலமாக உள்ள இந்த கிராமத்தில் மிகப் பெரிய வீடுகள் கலை நுணக்கத்துடன் கட்டப்பட்டுள்ளன.

இதையடுத்து இந்த வீட்டை காண்பதற்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாட்டு சுற்றுலாப்பயணிகள் இந்த கிராமத்திற்கு வந்து இந்த வீட்டை பார்த்து ரசித்து செல்கின்றனர். இது தவிர இங்கு புகழ்பெற்ற டைல்ஸ் தயாரிக்கும் ஆலைகள் மற்றும் கட்டுமான தொழில்களும் நடைபெற்று வருகின்றன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கிராமத்திற்கு பல்வேறு அடிப்படை வசதிகள் ஏதும் கிடையாது. குறிப்பாக இந்த பகுதியில் சரியான பஸ்வசதிகள் இல்லாததால் இப்பகுதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ–மாணவிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். கிராம மக்கள் சரக்குவாகனங்களில் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர்.

இது குறித்து ஆத்தங்குடியைச் சேர்ந்த சாகுல் என்பவர் கூறியதாவது:– பொதுவாக இந்த வழியாக காரைக்குடியில் இருந்து தினந்தோறும் 6ஏ, 9ஏ, 5,8, 2சி ஆகிய 4அரசு டவுன் பஸ்களும், காரைக்குடி–திருமயத்திற்கு தனியார் பஸ் ஒன்றும் இயங்கி வருகிறது.

இதுதவிர கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு தேவகோட்டையில் இருந்து அரசு விரைவு பஸ் ஒன்று காரைக்குடி மற்றும் ஆத்தங்குடி வழியாக திருச்சிக்கு சென்று வந்துக்கொண்டிருந்தது. இந்த பஸ் தேவகோட்டையில் தினந்தோறும் அதிகாலை 3.50மணிக்கு புறப்பட்டு காரைக்குடி வழியாக ஆத்தங்குடி கிராமத்திற்கு காலை 4.30மணிக்கு வரும். அதன் பின்னர் கோனாப்பட்டு வழியாக திருச்சிக்கு காலை 6.45மணிக்கு சென்றடையும், மறு மார்க்கத்தில் திருச்சியில் காலை 10மணிக்கு புறப்பட்டு ஆத்தங்குடி கிராமத்திற்கு காலை 11.45மணிக்கு வந்து சேரும்.

அதன் பின்னர் தேவகோட்டைக்கு மதியம் 1மணிக்கு சென்றடையும். 1.30மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு மாலை 5 மணிக்கு சென்றடையும். இவ்வாறு தினந்தோறும் விரைவு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் மூலம் ஆத்தங்குடி, கோனாப்பட்டு, பலவான்குடி, திருமயம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் பயன்அடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த பஸ் ஆத்தங்குடி வழியாக செல்வது நிறுத்தப்பட்டு திருச்சியில் இருந்து பை–பாஸ் சாலையில் காரைக்குடி நோக்கி செல்கிறது. இதனால் இந்த கிராமப்புற மக்கள் மற்றும் பள்ளி மாணவ–மாணவிகள் பெரிதும் அவதிஅடைந்து வருகின்றனர்.

மேலும் இந்த அரசு பஸ் திருச்சியில் இருந்தோ அல்லது தேவகோட்டை, காரைக்குடி பஸ் நிலையத்தில் புறப்படும்போது அதன் கண்டக்டர் ஆத்தங்குடி செல்லாது என்று கூறி பின்னர்தான் பஸ்சை இயக்குகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டால் அதற்கு தகுந்த பதில் கூறுவதில்லை. மேலும் ஆத்தங்குடி பகுதியில் இருந்து கல்லூரி மாணவிகள் 60 பேர் காரைக்குடி, பள்ளத்தூர், திருப்பத்தூர் பகுதியில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

காலை நேரங்களில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் இந்த கல்லூரி மாணவிகள் அந்த பஸ்சில் செல்ல மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கல்லூரி மாணவிகளுக்கு என்று மகளிர் பஸ் ஒன்று இந்த வழியாக இயக்க வேண்டும்.

இது தவிர புகழ்பெற்ற ஆத்தங்குடி நகருக்கு பலவான்குடியில் இருந்து வரும் சாலை ஒருவழி சாலையாகவும் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளதால் சில அரசு பஸ்கள் ஊருக்குள் வராமல் சென்று விடுகின்றன. மேலும் ஆத்தங்குடியில் இருந்து மதுரைக்கு செல்ல வேண்டுமானால் இந்த பகுதி மக்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள காரைக்குடியில் இருந்தோ அல்லது சுமார் 7கிலோ மீட்டர் தூரம் உள்ள குன்றக்குடிக்கு சென்று அதன் பின்னர்தான் செல்ல வேண்டும்.

இது தவிர ஆத்தங்குடியில் இருந்து குன்றக்குடிக்கு நேடியாக அரசு பஸ்கள் இல்லை. இதனால் இந்த பகுதி மக்கள் கனரக சரக்கு வாகனத்தில் தினந்தோறும் உயிரை பணயம் வைத்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே காரைக்குடியில் உள்ள போக்குவரத்து கழக அதிகாரிகள் ஏற்கனவே தேவகோட்டையில் இருந்து காரைக்குடி, ஆத்தங்குடி வழியாக இயக்கப்பட்ட இந்த அரசு விரைவு பஸ்சை தினந்தோறும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆத்தங்குடி வழியாக ஒரு வழிச்சாலையாக உள்ள சாலையை விரிவுப்படுத்த சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story