மானியம் அளிக்கும் போது உற்பத்தி, சேவை மேம்பாட்டிற்கு செலவு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்: கவர்னரின் செயலாளர், தலைமை செயலாளருக்கு கடிதம்
அரசு சார்பு நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கும் போது உற்பத்தி, சேவை மேம்பாட்டிற்கு செலவு செய்யப்படுகிறதா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கவர்னரின் செயலாளர் தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் உள்ள அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.500 கோடி வரை அரசு நிதி வழங்கி வருகிறது. ஆனால் அந்த நிறுவனங்களில் இருந்து எதுவும் அரசுக்கு திரும்ப கிடைப்பதில்லை. மேலும் அரசு ஒதுக்கீடு செய்யும் பணம் முழுவதும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளமாகவே கொடுக்கப்பட்டு செலவு செய்யப்பட்டு வருகிறது.
இதனாலும் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி கவர்னரின் செயலாளர் தேவநீதிதாஸ், தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர், தொழில்துறை செயலாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
புதுச்சேரி காதி மற்றும் கிராம தொழில் வாரியம் கடந்த 2017–18ம் நிதியாண்டில் ரூ.2.8 கோடிக்கு பொருட்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.9 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது. இதுபற்றி அறிந்த கவர்னர் கிரண்பெடி காதி மற்றும் கிராம தொழில் வாரிய அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
அதன்பின்னர் பின்வரும் குறிப்புகளை எழுதியுள்ளார்.
அதில் காதி மற்றும் கிராம தொழில் வாரிய ஊழியர்கள் அரசு ஊழியர்கள் அல்ல. எனவே தொழில் துறையோ, நிதித்துறையோ அந்த ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்க பொறுப்பு அல்ல. சம்பளத்திற்கு ஊழியர்களே சம்பாதிக்க வேண்டும். அரசு சார்பு நிறுவனங்களுக்கு மானியம் அளிப்பது மூலதனம் மற்றும் முதலீட்டு அடிப்படை தேவைகளுக்குத்தான், சம்பளத்திற்கு அல்ல. தொழில்துறை செயலாளர் வாரிய கூட்டத்தை கூட்டி தொழில் மேம்பாட்டிற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். செலவினை குறைக்க இருக்கின்ற தொழிலாளர்கள் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும்.
அரசு சார்பு நிறுவனங்களுக்கு நிதித்துறை மானியம் அளிக்கும் போது உற்பத்தி மற்றும் சேவை மேம்பாட்டிற்குத்தான் செலவு செய்யப்படுகிறதா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அரசு மானியத்தை வேறு செலவுக்கு பயன்படுத்தக்கூடாது என்பதையும் பார்க்க வேண்டும். இது தொடர்பாக அரசு நிறுவனங்கள் அனைத்திற்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.