கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவேன் எடியூரப்பா பேட்டி


கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவேன் எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 4 Jun 2018 3:30 AM IST (Updated: 4 Jun 2018 3:28 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவேன் என்று எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவேன் என்று எடியூரப்பா கூறினார்.

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

விவசாய கடன் தள்ளுபடி

தற்போது கர்நாடக மேல்-சபையில் ஆசிரியர் தொகுதிக்கான தேர்தல் பணியில் நான் ஈடுபட்டுள்ளேன். அதனால் இந்த கூட்டணி ஆட்சிக்கு எதிராக போராடாமல் உள்ளேன். இந்த தேர்தல் முடிந்த பிறகு விவசாய கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து போராடுவேன். எந்த மாதிரியான போராட்டத்தை நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம்.

மாநில கூட்டணி ஆட்சியில் நடந்து வரும் பிரச்சினைகளை மக்கள் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் 24 மணி நேரத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி கூறினார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் குமாரசாமி தோல்வி அடைந்துவிட்டார். இதுபோல் அடுத்து வரும் நாட்களில் இந்த கூட்டணி அரசின் தோல்விகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் பணியை நாங்கள் செய்வோம்.

உதவிகள் கிடைக்க...

கர்நாடகத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் விவசாய பயிர்கள் சேதம் அடைந்து, விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வருகிற 8-ந் தேதி நான் ஆய்வு பணியை தொடங்க உள்ளேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் கிடைக்க நான் என்னால் முடிந்த நடவடிக்கைகளை எடுப்பேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story