நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தற்கொலை
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனம் உடைந்த செஞ்சி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெரவளுரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் பிரதீபா (வயது 19). இவர் கடந்த ஆண்டு பிளஸ்–2 தேர்வில் 1,125 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். மருத்துவம் படிக்க விரும்பிய அவர் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். அதில் மாணவி பிரதீபா தேர்ச்சி அடைந்தும் குறைந்த மதிப்பெண் பெற்றதால் அவரால் அரசு மருத்துவ கல்லூரியில் சேர முடியவில்லை.
இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத முடிவு செய்த பிரதீபா, பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார். கடந்த மாதம் நடந்த நீட் தேர்வை பிரதீபா எழுதினார். இந்த நிலையில் நேற்று மதியம் நீட் தேர்வு முடிவு வெளியானது.
இதில் மாணவி பிரதீபா தோல்வி அடைந்தார். அவர் தேர்வில் 39 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். இதனால் தனது மருத்துவ படிப்பு கனவு கலைந்து விட்டதே என மன உளைச்சலில் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த பிரதீபா விஷம் குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரதீபா பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போனதால் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த ஆண்டும் நீட் தேர்வு தோல்வியால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.