முன்னாள் கிராம நிர்வாக அதிகாரி கோர்ட்டில் சரண்


முன்னாள் கிராம நிர்வாக அதிகாரி கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 5 Jun 2018 4:30 AM IST (Updated: 5 Jun 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

போலி சான்றிதழ் தயாரித்து அரசு நிதியை மோசடி செய்த வழக்கில் காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் கிராம நிர்வாக அதிகாரி, செங்கல்பட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த முகலவாடி பகுதியில் கிராம நிர்வாக அதிகாரிகளாக இருந்த துரைகண்ணு(வயது 60), கலையரசன்(61), மதுராந்தகம் வட்ட வருவாய் ஆய்வாளராக இருந்த தேவராஜ்(71), முகலவாடி தலையாரியாக இருந்த முருகேசன் ஆகிய 4 பேரும் சேர்ந்து போலியான சான்றிதழ்கள் தயாரித்து ரூ.20 ஆயிரம் அரசு நிதி மோசடியில் ஈடுபட்டனர்.

இதுபற்றி காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் 2009-ம் ஆண்டு இவர்கள் 4 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்தது.

அபராத தொகையை மட்டும் கட்டிய 4 பேரும், சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இதற்கிடையில் 2010-ல் தலையாரி முருகேசன் இறந்துவிட்டார். இதனால் அவர் மீது இருந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்டு, மற்ற 3 பேருக்கும் தண்டனையை குறைத்து தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் கட்ட உத்தரவிட்டது.

ஆனால் அதன்பிறகு 3 பேரும் சிறைக்கு செல்லாமல் தலைமறைவானார்கள். காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களை தீவிரமாக தேடிவந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேவராஜ் மற்றும் கலையரசன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த மதுராந்தகம் அடுத்த ராமபுரத்தை சேர்ந்த முன்னாள் கிராம நிர்வாக அதிகாரியான துரைகண்ணுவை காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடி வந்த நிலையில், அவர் நேற்று காலை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே விதித்த ஒரு ஆண்டு சிறை தண்டனையை அவர் அனுபவிக்கும்படி நீதிபதி கீதாராணி உத்தரவிட்டார். இதையடுத்து காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார், துரைகண்ணுவை புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story