குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 Jun 2018 4:15 AM IST (Updated: 5 Jun 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஒதப்பை கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அருகே உள்ள குசஸ்தலை ஆற்றில் அமைக்கப்பட்டு உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீரை மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு அனுப்பி, அங்கிருந்து குழாய்கள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

கோடை வெயிலின் தாக்கத்தால் குசஸ்தலை ஆறு வறண்டு விட்டது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால் ஆழ்துளை கிணறுகளில் இருந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் சரியாக கிடைப்பதில்லை. இதன் காரணமாக கடந்த 4 நாட்களாக கிராமத்தில் குழாய்கள் மூலம் சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பொது மக்கள், சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வயல்வெளிக்கு சென்று அங்குள்ள விவசாய கிணறுகளில் இருந்து குடங்களில் தண்ணீர் சுமந்து வருகின்றனர்.

இதனை கண்டித்தும், உடனடியாக தங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள், கையில் காலி குடங்களுடன் நேற்று காலை ஒதப்பையில் ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலையின் இருபுறமும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

குசஸ்தலை ஆற்றில் போர்க்கால அடிப்படையில் புதிய ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர்.

அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story