வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீரிழப்பை தடுக்க குழந்தைகளுக்கு உப்பு, சர்க்கரை கரைசல் வினியோகம்


வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீரிழப்பை தடுக்க குழந்தைகளுக்கு உப்பு, சர்க்கரை கரைசல் வினியோகம்
x
தினத்தந்தி 5 Jun 2018 4:45 AM IST (Updated: 5 Jun 2018 12:32 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 485 குழந்தைகளுக்கு வயிற்று போக்கினால் ஏற்படும் நீரிழப்பை தடுக்கும் பொருட்டு ஓ.ஆர்.எஸ். உப்பு, சர்க்கரை கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் குழந்தைகளுக்கு உப்பு, சர்க்கரை கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கி, குழந்தைகளுக்கு உப்பு, சர்க்கரை கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரைகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கடந்த 28-ந்தேதி முதல் வருகிற 9-ந்தேதி வரை 2 வாரங்களாக நடைபெற்று வரும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாமில் 1,802 அங்கன்வாடி மையங்கள் மூலம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 485 குழந்தைகளுக்கு வயிற்று போக்கினால் ஏற்படும் நீரிழப்பை தடுக்கும் பொருட்டு ஓ.ஆர்.எஸ். உப்பு, சர்க்கரை கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

இந்த பணியில் 1,697 அங்கன்வாடி பணியாளர்களும், சுகாதாரத்துறையை சேர்ந்த 308 பணியாளர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 5 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் குடும்ப நலம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பி.வி.தயாளன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரபாகரன், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் சேகர், மாவட்ட பயிற்சி மருத்துவர் தீபலட்சுமி, திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story