தமிழ்நாட்டில் 2 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்க நடவடிக்கை தேசிய ஆதிதிராவிடர்–பழங்குடியினர் ஆணைய துணைத்தலைவர் பேட்டி
தமிழ்நாட்டில் 2 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு இருப்பதாக தேசிய ஆதிதிராவிடர்–பழங்குடியினர் ஆணைய துணைத்தலைவர் கூறினார்.
ஈரோடு,
தேசிய ஆதிதிராவிடர்–பழங்குடியினர் ஆணைய துணைத்தலைவராக எல்.முருகன் உள்ளார். இவர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அரசின் நலத்திட்டங்கள் முறையாக சென்று சேர்கிறதா? வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார். ஏற்கனவே 17 மாவட்டங்களில் ஆய்வு பணியை முடித்த அவர் நேற்று ஈரோடு வந்தார்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் ஈரோடு மாவட்ட அளவிலான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு தேசிய ஆதிதிராவிடர்–பழங்குடியினர் ஆணைய துணைத்தலைவர் எல்.முருகன் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் முன்னிலை வகித்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, ஆர்.டி.ஓ.க்கள் ஆர்.நர்மதாதேவி, கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மத்திய–மாநில அரசுகள் வழங்கும் திட்டங்கள் துறை வாரியாக சென்று சேருகிறதா?. பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு இல்லாமல் உரியவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டு உள்ளதா?. எஸ்.சி., எஸ்.டி. சட்ட நடைமுறைகள், வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகியவை முறையாக கையாளப்படுகிறதா? என்பது உள்பட பல்வேறு தலைப்புகளின் கீழ் இந்த ஆய்வு நடந்தது.
பள்ளிக்கூடங்களில் படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ–மாணவிகளுக்கு கிடைக்க வேண்டிய உதவித்தொகைகள், கல்வி வாய்ப்பு ஆகியவை குறித்தும், உயர் கல்வி பயில மாணவ–மாணவிகளை ஊக்குவிப்பது, நீட் தேர்வு, ஐ.ஐ.டி. தேர்வுக்கு பயிற்சி மையங்களில் சேர்த்து பயிற்சி அளிப்பது, மலைவாழ் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்தும் அதிகாரிகளுக்கு ஆணைய துணைத்தலைவர் எல்.முருகன் அறிவுரை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சீனி அஜ்மல்கான், மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி அம்பிகா, மாவட்ட வழங்கல் அதிகாரி சுப்பிரமணியம், தாசில்தார்கள் அமுதா, வீரலட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ராஜகுமார் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்களான என்.ராமன், என்.ஆர்.வடிவேல், வீரகோபால் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் வழங்கினார்கள்.
கூட்ட முடிவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தேசிய ஆதிதிராவிடர்–பழங்குடியினர் ஆணைய துணைத்தலைவர் எல்.முருகன் கூறியதாவது:–
தமிழ்நாட்டில் 18–வது மாவட்டமாக ஈரோடு மாவட்டத்தில் ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. கூட்டத்தில் மத்திய அரசின் அனைத்து திட்டங்களை பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி அவற்றின் பயன்களை ஆதிதிராவிடர், பழங்குடியினர் பெற்றுக்கொள்ள அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்குவது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் சுமார் 2 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நிலம் எங்கெங்கு உள்ளது என்பது பற்றிய ஆய்வு மேற்கொண்டு அவற்றை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் 600 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு, அந்த நிலத்தை பயன்படுத்தி வரும் பட்டியல் இனத்தவர் அல்லாதவர்களுக்கு சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதில் பஞ்சமி நிலம் மற்றும், ஆதிதிராவிடர்களுக்கு வழங்குவதற்காக அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலமும் அடங்கும். வன்கொடுமை சட்டத்தின் கீழ் போடப்பட்டு உள்ள வழக்கு விசாரணைகளை விரைவாக முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் பழங்குடியின மக்கள் மேம்பாட்டு, கிராம வளர்ச்சிக்காக ரூ.100 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் 4 பேர் தலித் இனத்தை சேர்ந்தவர்கள். இந்த மரணங்கள் தொடர்பாக சம்பவ இடம் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த இன்னும் ஒரு வாரத்தில் தேசிய ஆதிதிராவிடர்–பழங்குடியினர் ஆணையத்தின் குழு நேரில் செல்ல இருக்கிறது.
இவ்வாறு தேசிய ஆதிதிராவிடர்–பழங்குடியினர் ஆணைய துணைத்தலைவர் எல்.முருகன் கூறினார்.
முன்னதாக நடந்த கூட்டத்தில் அருந்ததியர் இளைஞர் பேரவை சார்பில் வழங்கப்பட்ட மனுவில், அரசு உத்தரவுப்படி ஆதிதிராவிடர் இனத்தில் 7 உட்பிரிவினருக்கு அருந்ததியர் என சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். பெருந்துறை பெருமாள் கோவில் வளாகத்தில் பூட்டி வைக்கப்பட்டு உள்ள திருமண மண்டபத்தை ஆதிதிராவிடர் இன மக்களின் பயன்பாட்டுக்காக திறக்க வேண்டும். சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் நினைவுச்சின்னம் அமைக்க ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள நல்லமங்காபாளையத்தில் நிலம் ஒதுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் வழங்கப்பட்ட மனுவில், ஆதிதிராவிடர் மக்கள் கோவில்களுக்கு உள்ளே செல்ல தடை உள்ள பகுதிகளில் அனைவரும் கோவில்களுக்குள் சென்று சாமியை வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.