கச்சநத்தம் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் ஆர்.நல்லக்கண்ணு பேட்டி
கச்சநத்தம் கிராமத்தில் வாழும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கூறினார்.
மானாமதுரை,
திருப்பாச்சேத்தி அருகே உள்ளது கச்சநத்தம். இந்த கிராமத்தில் கடந்த 28–ந்தேதி புகுந்த ஒரு கும்பல் வீடு, வீடாய் நுழைந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் பலரை சரமாரியாக வெட்டினர். இதில் பட்டதாரி வாலிபர் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 6 பேர் மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் மாவட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கிடையில் கச்சநத்தம் கிராமத்தில் நடந்த சம்பவம் குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, கட்சியின் மாவட்ட செயலாளர் குணசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ. தங்கமணி, ஒன்றிய செயலாளர் முத்தையா ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் கிராமத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
பின்னர் அங்குள்ள அரசுப்பள்ளி வளாகத்தில் பொதுமக்களிடம் குறைகளை ஆர்.நல்லக்கண்ணு கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் கூறுகையில், பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து எங்கள் மீது அடக்குமுறையை கையாண்டு வருகின்றனர். கச்சநத்தத்தில் நடந்த மோதல் சம்பவம் என்பது கோவில் மரியாதை கொடுப்பது, கோஷ்டி மோதல் என்பது தவறான தகவல். எங்களுக்கும், பக்கத்து கிராமத்திற்கும் எந்த பிரச்சினையும் இல்லை. அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே தூங்கி கொண்டிருந்த எங்களை தாக்கினர். இச்சம்பவத்தில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். எங்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றனர்.
இதனையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்த ஆர்.நல்லக்கண்ணு கூறும்போது, கச்சநத்தம் கிராமத்தில் நடந்த சம்பவம் திட்டமிட்ட தாக்குதல். இங்குள்ள மக்களை பயமுறுத்தி வைக்க வேண்டும் என்றே தாக்குதல் நடத்தியுள்ளனர். வீடுகளில் ரத்தம் சிதறியுள்ளது. வாழ வேண்டிய இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் இன்னமும் இப்பகுதியில் உலா வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மேலும் கச்சநத்தம் கிராமமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, அதனை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை உயர்த்தி தர வேண்டும் என்றார்.