திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்,
திருப்பூர் மாநகரம் 15 வேலம்பாளையம் மகாலட்சுமி நகரில் உள்ள வழிபாட்டு கூடத்தை மூடுவதற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்ட தீர்ப்பை அமல்படுத்தக்கோரியும், கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்தாத திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கிஷோர்குமார், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், குணா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். கோவை கோட்ட செயலாளர் சேவுகன், மாவட்ட பொதுச்செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள், இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, வழிபாட்டு கூடத்தை மூட ஐகோர்ட்டு உத்தரவிட்டு 55 நாட்களாகியும் அமல்படுத்தாத திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் காவிக்கொடி ஏந்தி வந்து ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்றார்கள்.
ஆர்ப்பாட்டத்தையொட்டி திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதுபோல் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் திருப்பூர் வடக்கு தாசில்தார் சுப்பிரமணியன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகளும் பணியில் ஈடுபட்டனர்.