மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்துக்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த முதியவரால் பரபரப்பு


மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்துக்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த முதியவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Jun 2018 4:15 AM IST (Updated: 5 Jun 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்துக்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் முதியவர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்களும் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பெற்றுக் கொண்டு, அதன் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

கடந்த 17-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றதால் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் 2 வாரங்களுக்கு பிறகு நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு, வீட்டு மனைப்பட்டா, ரேஷன் அட்டை, சாதி சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 300-க்கும் மேற்பட்ட மனுக்களை கொடுத்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் கந்தசாமி அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் முன்பு பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

கலசபாக்கம் தாலுகா காந்தப்பாளையம் கிராமம் காந்தி நகர் காலனி பகுதியை சேர்ந்த பருவதம் என்ற முதியவரும், அவரது மகள் எல்லம்மாளும் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் கொண்டு வந்த பையை கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பையில் மண்எண்ணெய் பாட்டில் இருந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம், போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பருவதம் கூறுகையில், ‘எனக்கு 90 வயது ஆகிறது. நான் காந்தி நகர் காலனி பகுதியில் சுமார் 50 ஆண்டுகளாக வசித்து வருகிறேன்.

நான் வெளியூர் சென்று இருந்த வேளையில் சர்வேயர் இடத்தை அளந்து எனது இடத்தின் பட்டாவில் இருபுறமும் சாலை உள்ளது போன்று பட்டா வழங்கி உள்ளார். இதையறிந்த எனது பக்கத்து வீட்டுக்காரர், சாலை வழி கூறப்பட்ட இடத்தை ஆக்கிரமித்துள்ளார். இதனை தட்டி கேட்ட என்னை தாக்கினார். இதுகுறித்து கடலாடி போலீசிலும், தாலுகா அலுவலகத்திலும் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

இதையடுத்து போலீசார் அவர்களை கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர்.

ஆரணி காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் குறைதீர்வு கூட்டத்தில் அளித்துள்ள மனுவில், ஆரணி நகராட்சி காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் பல ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட கடைகளை குத்தகை உரிமம் எடுத்து காய்கறி வியாபாரம் செய்து வருகின்றோம். இந்த கடைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. கடந்த 2-ந் தேதி அங்குள்ள கடைகளின் மேற்கூரை இடிந்து விழுந்துவிட்டது. எனேவ, போர்க்கால அடிப்படையில் சீரமைத்து அல்லது மாற்று இடம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை நகரத்திற்கு உட்பட்ட தேனிமலை, பார்வதி நகர், அண்ணா நகர், சத்தியா நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களில் இருந்து 10 பேர் மட்டும் சென்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் தேனிமலையில் உள்ள அரசு புறம்போக்கு மற்றும் பஞ்சமி நிலத்தை சுமார் 100 ஆண்டுகளாக இடுகாடாக பயன்படுத்தி வருகின்றோம். இந்த நிலையில் சிலர் இந்த இடத்தில் உள்ள பஞ்சமி நிலத்தினை மறைத்து பட்டா மாற்றம் செய்து உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்ற உத்தரவுப்படி உதவி கலெக்டர் தலைமையில் அரசு அதிகாரிகள் அந்த இடுகாடு பகுதிக்கு சென்று அதனை அளந்து சென்று உள்ளனர்.

நாங்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வரும் இடுகாட்டினை அங்கீகரித்து எங்களுக்கு எரியூட்டு தகன மேடை அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக மூலமாக 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9 ஆயிரத்து 820 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலி, 2 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.12 ஆயிரத்து 800 மதிப்பிலான 3 சக்கர சைக்கிள்கள், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரத்து 400 மதிப்பிலான ‘எல்போ’ ஊன்று கோல், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 மதிப்பிலான மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு நாற்காலி, 70 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, 10 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் ஆகியவை வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலால் உதவி ஆணையர் தண்டாயுதபாணி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

குறைதீர்வு நாள் கூட்டத்தை யொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அனைவரது உடமைகளையும் சோதனை செய்தபிறகே அனுப்பினர்.


Next Story