அரசு பெண் டாக்டரை ஆபாச படம் எடுத்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் கணவர் உள்பட 2 பேர் மீது வழக்கு


அரசு பெண் டாக்டரை ஆபாச படம் எடுத்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் கணவர் உள்பட 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 5 Jun 2018 4:15 AM IST (Updated: 5 Jun 2018 3:26 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் அரசு பெண் டாக்டரை ஆபாச படம் எடுத்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய அவரது கணவர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்,

சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த அரசு பெண் டாக்டர் ஒருவர், கோவை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரை சந்தித்து ஒரு புகார் மனுவை அளித்தார்.

அந்த மனுவில், தனக்கும், சென்னையில் அரசு டாக்டராக பணியாற்றி வரும் பாலாஜி என்பவருக்கும் கடந்த 1999-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஆனால் எனது கணவர் பல்வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு விவாகரத்து கேட்டு என்னிடம் வற்புறுத்தி வந்தார். இது தொடர்பாக சேலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, எனது கணவரை நேரில் அழைத்து கண்டித்து அனுப்பி வைத்தனர். அதன்பிறகு எனது கணவர், அஸ்தம்பட்டியை சேர்ந்த வக்கீல் ஒருவருடன் சேர்ந்து கொண்டு என்னை கொடுமைப்படுத்தி வருகிறார்.

கணவரும், அந்த வக்கீலும் சேர்ந்து என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி அதனை பதிவு செய்து அசிங்கப்படுத்தினர். மேலும், எனக்கு தெரியாமல் ஆபாச படம் எடுத்து அதை ‘வாட்ஸ்-அப், பேஸ்புக்‘ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டி வருகிறார்கள். விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதுடன், சேலத்தில் உள்ள வீட்டை தனது பெயருக்கு மாற்றி தரவேண்டும் என்றும், இல்லாவிட்டால் குழந்தைகளை கொன்று விடுவதாகவும் மிரட்டல் வருகிறது. இதனால் அவர்களது மிரட்டலுக்கு பயந்து, விவாகரத்து நோட்டீசில் கையெழுத்து போட்டு கொடுத்தேன்.

தற்போது, ஆபாச படங்களை வெளியிடாமல் இருக்கவும், அதனை என்னிடம் ஒப்படைக்கவும் ரூ.10 லட்சம் கேட்பதுடன் அதனை ஏற்காட்டிற்கு கொண்டு வந்து தரவேண்டும் என்றும் மிரட்டி வருகிறார்கள். மேலும், நாங்கள் சொன்னபடி நடந்து கொள்ள வேண்டும் என்று எனது கணவரும், அந்த வக்கீலும் கூறி வருகின்றனர். இதனால் அவர்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரோஜா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, பெண் டாக்டரை ஆபாச படம் எடுத்து மிரட்டிய அவரது கணவர் பாலாஜி, மற்றும் வக்கீல் ஆகிய 2 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story