காவிரி விவகாரத்தில் இணக்கமான நல்லுறவு ஏற்பட வேண்டும்: கமல்ஹாசன் சந்திப்புக்கு பிறகு முதல்-மந்திரி குமாரசாமி அறிவிப்பு
காவிரி விவகாரத்தில் இணக்கமான நல்லுறவு ஏற்பட வேண்டும் என்றும், எனவே தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும் கமல்ஹாசன் சந்திப்புக்கு பிறகு முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார்.
பெங்களூரு,
காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் தொடர்பாக கர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது.
காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட்டு சிறிய அளவில் திருத்தம் செய்தது. தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரின் அளவை குறைத்து, அதை பெங்களூருவின் குடிநீர் தேவைக்கு வழங்கியது. இந்த பிரச்சினையில் நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துள்ளது.
அதில் தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநிலங்களின் பிரதிநிதிகளும் இடம் பெறுகிறார்கள். தமிழக அரசு தனது பிரதிநிதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கர்நாடக அரசு இதுபற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பதாக முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்து இருக்கிறார். இதற்கான ஆலோசனையில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக புதிய முதல்-மந்திரி குமாரசாமியை தமிழகத்தை சேர்ந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார். பகல் 12.15 மணிக்கு கமல்ஹாசன் கிருஷ்ணா இல்லத்திற்கு வந்தார். அதைத்தொடர்ந்து 12.30 மணிக்கு முதல்-மந்திரி குமாரசாமி அங்கு வந்தார். அப்போது இருவரும் சந்தித்து கைகுலுக்கினர். குமாரசாமிக்கு கமல் ஹாசன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
இரு மாநிலங்களுக்கு இடையே நிலவி வரும் காவிரி பிரச்சினை குறித்து அவர்கள் இருவரும் சுமார் 20 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின் அவர்கள் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். முதலில் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தென்இந்தியாவில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சினிமாவில் நடித்து புகழ்பெற்று விளங்கும் கமல் ஹாசன் அரசியல் பிரவேசம் செய்துள்ளார். அவர் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார். அவர் என்னை சந்தித்து பேசினார். காவிரி பிரச்சினையில் கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு இடையே ஒரு இணக்கமான நல்லுறவு ஏற்பட வேண்டும் என்று கமல்ஹாசன் விரும்புகிறார். அதுபற்றி நாங்கள் பேசினோம்.
இரு மாநிலங்களும் பரஸ்பரம் இணக்கமான நல்லுறவை தொடர வேண்டும் என்று அவர் கூறினார். காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. சகோதரத்துவ மனப்பான்மையுடன் இரு மாநிலங்களும் நட்புறவோடு பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார்.
கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு என இரு மாநில விவசாயிகளுமே எங்களுக்கு முக்கியமானவர்கள். காவிரி பிரச்சினையில் கர்நாடக விவசாயிகளுக்கு சில கருத்து வேறுபாடுகள் இருப்பது உண்மை தான். இவற்றை பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும். பிரச்சினைகளையும் இரு மாநில விவசாயிகள் சரிசமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும்.
இந்த காவிரி பிரச்சினை இன்று நேற்று வந்தது இல்லை. கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பிரச்சினை இருந்து வருகிறது. இந்த பிரச்சினையால் மக்கள், குறிப்பாக விவசாயிகள் சலிப்படைந்துவிட்டனர். இந்த பிரச்சினையை இரு மாநில மக்களும் பரஸ்பரம் புரிந்துகொள்ளுதல் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த பிரச்சினை குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார்.
காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தின் நலனை காக்க வேண்டியது எனது கடமை. இரு மாநிலங்களின் நலனும் முக்கியம். எதிர்காலத்தில் அரசியல் சாசனப்படி, கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்றும் நமது நாட்டில் கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு இணக்கமாக செயல்பட்டு பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதை இரு மாநிலங்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
அதைத்தொடர்ந்து கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தமிழக மக்கள் சார்பில் நான் இங்கு வந்து கர்நாடக முதல்-மந்திரியை சந்தித்தேன். அவரும் கர்நாடக மக்கள் சார்பில் என்னிடம் பேசினார். இரு மாநிலங்களும் சகோதரத்துவ மனப்பான்மையுடன் காவிரி நீர் பிரச்சினையை அணுகி தீர்த்துக்கொள்ள வேண்டும். காவிரி பிரச்சினை குறித்து சில முக்கியமான விஷயங்களை கர்நாடக முதல்-மந்திரியிடம் எடுத்துக் கூறினேன். குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வேண்டும் என்று கூறினேன். எனது உணர்வை அவரும் பிரதிபலித்தார். இந்த பேச்சுவார்த்தை உணர்வுப்பூர்வமாக இருந்தது.
குமாரசாமியின் பேச்சு எனது இதயத்தை நிரப்பிவிட்டது. காவிரி இல்லாமல் இரு மாநில மக்களும் வாழ முடியாது. நான் வக்கீல் கிடையாது. ஆனால் எனது தந்தை வக்கீலாக பணியாற்றியவர். எங்கள் குடும்பத்தில் பலர் வக்கீலாக இருக்கிறார்கள். அவர்கள் கூறும் ஆலோசனை என்னவென்றால், கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு மக்கள் ஒன்றுசேர வேண்டும் என்பது தான். இந்த பிரச்சினையில் நமது மனநிலை மாற வேண்டும்.
எங்களது கட்சி சிறிய கட்சி. நான் இப்போது தான் குழந்தையாக உள்ளேன். இப்போது தான் கட்சியே ஆரம்பித்துள்ளேன். எனக்கு எந்த சுமையும் இல்லை. நான் ‘ஈகோ‘ பார்க்கவில்லை. அதனால் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக அணிலாக, பாலமாக, காலணியாக மாறவும் தயார். குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு கர்நாடகத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அரசியலை விட நமக்கு விவசாயிகளின் நலன் முக்கியம். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த ஆணைய வழிகாட்டுதல்படி இரு மாநிலங்களும் நடந்து கொள்ளும் என்று நம்புகிறேன். சுமுகமான பேச்சுவார்த்தை மூலம் காவிரி பிரச்சினை மட்டுமல்ல, தேசத்தில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். முதல்-மந்திரி குமாரசாமியின் பேச்சு பெருந்தன்மையாக இருந்தது. இது நீண்ட நட்பின் தொடக்கம் ஆகும்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
Related Tags :
Next Story