ஆப்லைன் யூ-டியூப் வீடியோக்களை அழிப்பது எப்படி?
உலகின் மிகப்பெரிய வீடியோ பகிர்தல் தளம் யூ-டியூப். இந்தியாவிலும் இது மிக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
யூ-டியூப் தளமானது வீடியோக்களை பதிவிறக்கம் செய்து, ஆப்லைனில் ரசிக்க உதவும் வசதியை வழங்குகிறது. அதுவும் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இத்தகைய வசதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஐபோன், ஐபேடுகளைவிட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் யூ-டியூப் வீடியோக்கள் எளிமையாக பதிவிறக்கம் செய்யவும், பார்க்கவும் முடியும். இந்த வசதியில் நீங்கள் நிறைய வீடியோக்களை பதிவிறக்கம் செய்து ரசித்திருக்கலாம்.
ஒரு கட்டத்தில் உங்கள் ஸ்மார்ட்போன் யூ-டியூப் வீடியோக்களால் நிரம்பி வழியலாம் அல்லது ஸ்மார்ட்போன் மந்தமாக செயல்பட ஆரம்பிப்பதை உணரலாம். இதற்கு காரணம் நீங்கள் பதிவிறக்கம் செய்திருக்கும் ஆப்லைன் வீடியோக்களாகவும் இருக்கலாம். இதை நீங்கள் அறிந்து கொண்டதும், யூ-டியூப் வீடியோக்களை போன் மெமரியில், கேலரியில் சென்று அழித்தாலும் அவை அழியாது.
இப்படி சேமிக்கப்பட்டிருக்கும் யூ-டியூப் ஆப்லைன் வீடியோக்களை எப்படி அழிப்பது என்று பார்ப்போமா...
ஒரு வீடியோவை யூ-டியூப்பில் இருந்து பதிவிறக்கம் செய்தால், அதை பார்த்துவிட்டு அழித்துவிட வேண்டும். அப்படியில்லாமல் 30 நாட்களுக்கும் மேலாக அந்த வீடியோவை திறந்து பார்க்காமல் வைத்திருந்தால் அது டவுன்லோடு பகுதியிலேயே இருக்கும், திரும்ப அதை பார்க்கவும் முடியாது, இணையம் செல்லாமல் டெலிட் செய்யவும் முடியாது.
கூடுதல் எம்.பி. அளவு கொண்ட வீடியோக்களையும், அதிக எண்ணிக்கையிலான வீடியோக்களையும் இப்படி ஆப்லைனில் டவுன்லோடு செய்து வைத்திருந்தால் சீக்கிரமே ஸ்மார்ட்போன்களின் சேமிப்புத்திறன் நிரம்பிவிடும். செயல்பாடும் மந்தமாகிவிட வாய்ப்புண்டு.
இப்படி எளிதில் டெலிட் ஆகாத டவுன்லோடு வீடியோக்களை அழிக்க இணையதளம் செல்ல வேண்டும். உங்கள் யூ-டியூப் கணக்கை திறந்து கொள்ளுங்கள். இப்போது செட்டிங்ஸ் செல்லுங்கள். ஆண்ட்ராய்டு போன் என்றால் டவுன்லோடு பகுதியில் இதற்கான வசதிகள் இருக்கும்.
டவுன்லோடு சென்ற பின்னர் ‘டவுன்லோடு ஓவர் வைபை ஒன்லி’ என்ற ஆப்சனை ஆன் செய்யவும். பின்னர் டெலிட் டவுன்லோடு என்று கொடுத்தால் அனைத்து ஆப்லைன் வீடியோக்களும் அழிக்கப்பட்டுவிடும். பார்த்தது, பார்க்காதது என அனைத்து வீடியோக்களையும் அழித்துவிட விரும்பினால் இந்த வசதியை பயன்படுத்தி அழிக்கலாம். ஆனால் சில வீடியோக்களை வைத்துவிட்டு, மீதி வீடியோக்களை மட்டுமே அழிக்க விரும்பினால் ‘லைபிரரி’ என்ற ஆப்சனுக்குச் செல்லுங்கள்.
பின்னர் அதன் வலது ஓரத்தில் உள்ள ‘டவுன்லோட்ஸ்’ என்ற வசதியை சொடுக்கவும். இப்போது பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோக்கள் பட்டியலாக காண்பிக்கப்படும். அவற்றில் தேவையற்ற வீடியோக்களை தேர்வு செய்து டெலிட் கொடுக்கலாம். இப்போதுதான் உங்கள் மொபைல் மெமரியில் சேமிக்கப்பட்டிருக்கும் யூ-டியூப் வீடியோக்கள் நீக்கம் செய்யப்பட்டிருக்கும். அவ்வப்போது ஆப்லைன் வீடியோக்கள், வாட்சப் வீடியோக்களை அழித்து வைப்பது ஸ்மார்ட்போனின் செயல்பாட்டிற்கும், ஆயுளுக்கும் நல்லது!
Related Tags :
Next Story