ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்ட பயிற்சி முகாம்


ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்ட பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 6 Jun 2018 4:30 AM IST (Updated: 5 Jun 2018 11:57 PM IST)
t-max-icont-min-icon

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்ட பயிற்சி முகாமை சென்னை கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி ஜவஹர்் தொடங்கி வைத்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூட்டரங்கில் காஞ்சீபுரம் மாவட்ட கருவூலம் மற்றும் கணக்குத்துறை சார்பில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.

முகாமை சென்னை கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மை செயலாளரும், ஆணையருமான தென்காசி ஜவஹர் தொடங்கி வைத்தார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை வகித்தார்.

பின்னர் கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி ஜவஹர் பேசியதாவது:-

நிதி மேலாண்மை தொடர்பான அரசு பணிகள் திறம்பட நடைபெற, மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மாநில அரசு மனிதவள மேலாண்மையை இணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

தற்பொழுது நடைமுறையில் உள்ள தன்னியக்க கருவூல பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப்பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியவை இந்த திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசு ரூ.288.91 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதர பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பிக்க இயலும். மேலும் இந்த திட்டத்தில் அரசின் வருவாயினை இணையவழி மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதால் அரசின் நிகழ் நேர வரவினை உடனுக்குடன் அறிய இயலும்.

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் எண்ம ஒப்பம் மற்றும் விரல் ரேகைப் பதிவுமுறை மூலம் உறுதிப்படுத்துவதன் மூலம் மாநிலத்தின் நிதிநிலை விவரம் உடனுக்குடன் அரசுக்குக் கிடைப்பதுடன் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை நிர்வாகம் சிறப்பாக நடைபெற வழி வகுக்கும்.

இந்த திட்டத்தின் மூலம் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினி மயமாக்கப்பட்டு சம்பளப்பட்டியல், பதவிஉயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விவரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பதியப்படும். இந்த திட்டம் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அரசுப் பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு பெறும் வரை உள்ள அரசுப் பணியாளர்களின் பணி வரலாறானது முழுமையாக இந்த திட்டத்தின் மூலம் கணினி மயமாகிறது.

இதனால் பல்வேறு அலுவலகங்களுக்கு இடையேயும் வெவ்வேறு ஊர்களுக்கு இடையில் பணிப்பதிவேடுகள் மாற்றப்படுவதால் ஏற்படும் கால விரயம் மற்றும் சிரமங்கள் முடிவுக்கு வரும். ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படும்.

பணியாளர் தொடர்பான அரசின் ஆய்வுக்கும் திட்டமிடலுக்கும் கணினி ஆவணங்கள் உதவும். பணிமாற்ற முடிவுகள் தாமதமின்றி முறையாக எடுக்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 31,511 அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினி மயமாக்கப்படும் பணிகள் முடிவடைந்துள்ளன.

பயிற்சியின் கீழ் சம்பளம் மற்றும் சம்பளம் சாராபட்டியல்கள் தயாரித்தல், மின் பணிப்பதிவேடு பராமரித்தல், ஓய்வூதிய கருத்துருக்கள் தயாரித்தல் மற்றும் இதர இனங்கள் குறித்து கருவூலத்துறை அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் போஸ்லே சச்சின் துக்காராம், கூடுதல் கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குனர் ஏ.பி.மகாபாரதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன், கருவூலம் மற்றும் கணக்குத்துறை மண்டல இணை இயக்குனர் திருஞானசம்பந்தம், இணை இயக்குனர் ஜீவா, கைத்தறி மற்றும் துணிநூல் துறை இணை இயக்குனர் செல்வம், மாவட்ட கருவூல அலுவலர் வேலாயுதம் மற்றும் அரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story