வெடிமருந்து தொழிற்சாலையில் உற்பத்தி குறைப்பு குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. பேச்சு
குன்னூர் அருகே உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் உற்பத்தி குறைப்பு குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என்று ஆர்.எஸ்.பாரதி எம்.பி. கூறினார்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள அருவங்காட்டில் வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் அங்கீகரிகக்கப்பட்ட தொழிற்சங்கங்களாக சி.எப்.எல்.யு., ஐ.என்.டி.யு.சி. போன்ற தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. வெடிமருந்து தொழிற்சாலையின் உற்பத்தி இலக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. மேலும் கடந்த மே மாதம் 21–ந் தேதிக்கு பிறகு தொழிலாளர்களுக்கு கூடுதல் வேலை நேரம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. தொழிற்சாலையில் உற்பத்தி இலக்கு அதிகரிக்கவும், மூடப்படாமல் இருக்கவும் தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன.
இந்த நிலையில் சி.எப்.எல்.யு. தொழிற்சங்கமும், ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கமும் ஒன்றிணைந்து கூட்டுக்குழுவை அமைத்து உள்ளனர்.
இந்த கூட்டுக்குழு சார்பில் தொழிற்சாலையின் தற்போதுள்ள நிலவரத்தை எடுத்துக்கூறும் வகையில் அனைத்து தொழிலாளர்களிடமும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இந்த மனு கே.ஆர்.அர்ஜூனன் எம்.பி. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களிடமும் வழங்கப்பட்டது. கூட்டுக்குழுவின் சார்பில் தி.மு.க. பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதியிடம் மனு கொடுக்கும் நிகழ்ச்சி வெடிமருந்து தொழிற்சாலை மனமகிழ் மன்றத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சி.எப்.எல்.யு. தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யு.சி. தலைவர் ஜோஷிலாசர், பொது செயலாளர் திலீப்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனைதொடர்ந்து ஆர்.எஸ்.பாரதி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்திய நாட்டை பாதுகாக்கும் ராணுவத்திற்கு உறுதுணையாக அகில இந்திய அளவில் 41 தளவாட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் 11 தொழிற்சாலைகள் வெடிமருந்துகளை தயாரித்து வருகின்றன. இதில் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையும் ஒன்றாகும். இந்த தொழிற்சாலை 1904–ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பாரம்பரியமுள்ள இந்த தொழிற்சாலை மத்திய அரசின் கொள்கையால் நலிவடையும் நிலை இருந்து வருகிறது.
கடந்த மாதம் 21–ந் தேதி முதல் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் வேலை நேரம் நிறுத்தப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி தொழிற்சாலையின் உற்பத்தி இலக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே கொடுக்கப்பட்டு உள்ளது. 1980–ம் ஆண்டில் இதே போன்று உற்பத்தி நிறுத்தி வைப்பு சம்பவம் நடைபெற்றது. இதேபோன்று தற்போது நடைபெறுமா? என்ற அச்சம் தொழிலாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தரமானதாகவும், விலைகுறைவாக கொடுத்தாலும் மத்திய அரசு உற்பத்தி இலக்கை அதிகரிக்கவில்லை.
நமது நாட்டில் பாதுகாப்பு தளவாடங்கள் 30 சதவீதங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது 70 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனை தவிர்க்க உள்நாட்டிலேயே உற்பத்தி செய்தால் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். கூடுதல் பணிநேர குறைப்பு, உற்பத்தி குறைப்பு போன்றவற்றை குறித்து தி.மு.க. சார்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம்.
தொழிலாளர்களுக்கு கூடுதல் பணி நேரம் நிறுத்தப்பட்டதால் தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மூடப்பட்டால் நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கும். தொழிலாளர்களின் பாதிப்பு குறித்து தி.மு.க. எம்.பி.க்கள் சார்பில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மனு கொடுப்போம். இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.பி.க்களையும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம். இதற்கும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால் காவிரி பிரச்சினையை போன்று போராட்டம் நடத்த முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது நீலகிரி மாவட்ட தி.மு.க. செயலாளர் பா.மு.முபாரக், துணை செயலாளர் தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர் பிரேம் குமார் உள்பட பலர் இருந்தனர்.