நன்னிலம் அருகே பழங்கால உலோக சிலை கண்டெடுப்பு


நன்னிலம் அருகே பழங்கால உலோக சிலை கண்டெடுப்பு
x
தினத்தந்தி 6 Jun 2018 4:15 AM IST (Updated: 6 Jun 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் அருகே பழங்கால உலோக சிலை கண்டெடுக்கப்பட்டது.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கூத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் கணேசன் (வயது 22). இவர் சம்பவத்தன்று அப் பகுதியில் உள்ள பருத்தி குளத்துக்கு கை, கால் கழுவுவதற்காக சென்றார்.

அப்போது வயலில் இருந்து குளத்துக்கு தண்ணீர் வடியும் பாதையில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பாதி அளவு புதைந்த நிலையில் ஒரு பொருள் அவருடைய காலில் தட்டுப்பட்டது. அதை அவர் எடுத்து பார்த்தபோது உலோகத்தால் ஆன சிலை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிலை கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயனிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த நன்னிலம் தாசில்தார் அன்பழகன், பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, வருவாய் ஆய்வாளர் கருணாமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று உலோக சிலையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

குளத்தில் கண்டெடுக்கப்பட்ட உலோக சிலை 1 அடி உயரமும், 5 கிலோ எடையும் இருந்தது. சிலையுடன் பீடமும் இருந்தது. முறுக்கிய மீசை மற்றும் முண்டாசுடன் கம்பீரமாக காட்சி அளித்தது. கலை நயமிக்க இந்த சிலை பழங்காலத்தை சேர்ந்த அரசரின் சிலை போல் இருப்பதாகவும், எந்த காலத்தை சேர்ந்தது? அரசரின் பெயர் என்ன? எந்த உலோகத்தால் ஆனது? என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை என்றும், தொல்லியல் துறையினரின் ஆய்வுக்கு பின்னரே சிலை பற்றிய முழு விவரங்களும் தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் பழங்காலத்தை சேர்ந்த வேறு பொருட்கள் ஏதேனும் புதைந்திருக்கிறதா? என்பதை அறிய அந்த இடத்தை தோண்டி பார்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

அதிகாரிகளின் விசாரணையை தொடர்ந்து பழங்கால உலோக சிலை, நன்னிலம் தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. 

Next Story