கவர்னரின் பேச்சை கேட்டு திட்டங்களுக்கு அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள் சிவா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு


கவர்னரின் பேச்சை கேட்டு திட்டங்களுக்கு அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள் சிவா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 6 Jun 2018 4:15 AM IST (Updated: 6 Jun 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

கவர்னரின் பேச்சை கேட்டுக்கொண்டு திட்டங்களுக்கு அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதாக சிவா எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் சிவா பேசியதாவது:–

சூறாவளியில் சிக்கிய கப்பலைப்போல் நிதி நெருக்கடியில் சிக்கிய புதுச்சேரி அரசை முதல்–அமைச்சரும், அமைச்சர்களும் நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த அரசுக்கு கவர்னர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார்.

ஏற்கனவே புதுவையில் 15 ஆண்டுகள் முதல்–அமைச்சராகவும், 24 ஆண்டுகள் பதவியல் இருந்தவராலும்தான் இந்த பிரச்சினை வந்தது. அவர் நன்கு திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் இந்த கடன் சுமை இருந்திருக்காது. காங்கிரஸ் அரசு பொறுப்பேற்கும்போதே நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை தந்திருந்தால் பழி நம்மீது வந்திருக்காது.

புதுவையில் அதிகாரிகள் இரட்டை ஆட்சிக்கு வழி செய்வதுபோல் கவர்னரின் பேச்சினை கேட்டு திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். கவர்னர் கடந்த 2 வருடமாக குப்பை வாரும் பணியை செய்து வருகிறார். ஆனால் இன்னும் நிலைமை சரியாகவில்லை. இதில் இருந்து அவரது செயல்பாடு எப்படி உள்ளது என்பது தெரிகிறது.

நகரப்பகுதியில் இருந்த கழிப்பிடங்கள் பல மூடப்பட்டுள்ளன. கவர்னர் எந்த வேலையை செய்தாலும் அதில் தோல்விதான். ரோடியர் பஞ்சாலை, சாலை போக்குவரத்து கழகம், பாப்ஸ்கோ தொடர்பான விசாரணை கமி‌ஷன் என்னவானது? உள்ளாட்சித்துறையில் யாருக்கும் தெரிவிக்காமலேயே வரி விதிப்புகள் நடந்துள்ளன. புதிதாக எதையும் செய்யாமலேயே வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

கவர்னர் அவர் சார்ந்த கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர நினைப்பதால்தான் பிரச்சினை வருகிறது. மருத்துவ காப்பீடு திட்டம் ஏனாம் பகுதியில் மட்டும்தான் உள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாகி பகுதி மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? இந்த திட்டத்தில் அதிகாரிகள் தங்களுக்கு வேண்டிய ஆஸ்பத்திரிகளுடன் கூட்டு சேர்ந்து செயல்படுகிறார்கள்.

இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. பேசினார்.


Next Story