அரசை கலைக்க நினைக்கும் கவர்னரின் எண்ணம் ஈடேறாது - எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ. திட்டவட்டம்


அரசை கலைக்க நினைக்கும் கவர்னரின் எண்ணம் ஈடேறாது - எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ. திட்டவட்டம்
x
தினத்தந்தி 6 Jun 2018 4:45 AM IST (Updated: 6 Jun 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி அரசை கலைக்க நினைக்கும் கவர்னரின் எண்ணம் ஈடேறாது என்று எம்.என்.ஆர்.பாலன் கூறினார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பேசியதாவது:–

எம்.என்.ஆர்.பாலன்: சட்டசபையில் வழக்கமாக பட்ஜெட்டிற்கு முன்பாகத்தான் கவர்னர் உரையாற்றுகிறார். ஆனால் கவர்னர் கிரண்பெடி ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் நான்தான் உரையாற்றுவேன் என்று சிறுபிள்ளைபோல் அடம் பிடிக்கிறார். இரட்டை ஆட்சி நடப்பதை போன்ற நிலையை உருவாக்கி உள்ளார்.

கே.வி.டெக்ஸ்–க்கு சென்று என்ன நடந்தது என்று தெரியாமலேயே சீல் வைக்க சொல்கிறார். இதுதான் கவர்னர் வேலையா? அங்குள்ள பிரச்சினையே போக்குவரத்து நெரிசல்தான். அதை சீர்செய்ய என்ன நடவடிக்கை எடுத்தார்? இவரது செயல்பாட்டினால் அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கின்றனர்.

தனியார் படகு குழாம் அமைக்க துறை இயக்குனரே அனுமதி அளித்துள்ளாரா? அதற்கு அவருக்கு அதிகாரம் உள்ளதா? புதுச்சேரி கவர்னர் கிரண்பெடியின் எண்ணமே இந்த ஆட்சியை கலைப்பதுதான். அவர் பாரதீய ஜனதா கட்சியின் ஏஜெண்டாக செயல்படுகிறார். அவரது எண்ணம் ஈடேறாது. கே.வி.டெக்ஸ் சென்ற கவர்னர் படகு குழாம் ஊழியர் பிரச்சினைக்கு சென்றாரா?

தனவேலு: மாதந்தோறும் இலவச அரிசி வழங்கப்படவில்லை. இலவச வேட்டி, சேலையும் இல்லை. பயிர்காப்பீடு திட்டமும் அடியோடு நிற்கிறது. கால்நடை பராமரிப்பு துறை இருக்கிறதா? இல்லையா? ரேசன் கார்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் மற்றும் மேல் உள்ளவர்கள் பிரச்சினை அப்படியே உள்ளது. ரேசன் கடை ஊழியர்கள், பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கல்விக்கட்டணத்தை குறைக்கும் முயற்சி விழலுக்கு இறைத்த நீராக மாறிவிடக்கூடாது. புதுவை மாநிலத்தில் மாநில தேர்வாணையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சார கட்டணம் குறைக்கப்பட வேண்டும். நாளுக்குநாள் குறைந்துவரும் தொழில்வளம் குறித்து ஆராய வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு தனியாக இயக்குனர் நியமிக்கப்படாதது 70 சதவீத மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம். எனவே கவர்னர் உரைக்கு நன்றி சொல்ல யோசிக்கிறேன்.

விஜயவேணி: சரக்கு மற்றும் சேவை வரியில் நமது பங்கு உரிய நேரத்தில் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். அதேபோல் குளம் தூர்வாரும் பணிகளையும் தொடங்கவேண்டும். பாகூர், நெட்டப்பாக்கம் கொம்யூன்களில் உள்ள கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும். எனது தொகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு கூடுதலாக பால் மாடுகளை வழங்கவேண்டும். கவர்னர் அமைச்சரவை கோப்புகளுக்கு உடனடியாக ஒப்புதல் அளித்து மாநில வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

துணை சபாநாயகர் சிவக்கொழுந்து: மத்திய அரசிடம் நிதி பெற்றுத்தர கவர்னர் நடவடிக்கை எடுக்கவேண்டும். வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிதி ஆதாரங்களை பெற முனைப்பு காட்டாமல் நலத்திட்டங்களை நிறைவேற்ற தடை விதித்தாலும் அரசு அதை சவாலாக எடுத்து முன்னேறுகிறது. இந்த அரசின் முயற்சியினால் புதுவையில் மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கி உள்ளது. அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவேண்டும். அதேபோல் தொகுதி மேம்பாட்டு நிதியையும் தந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்.

தீப்பாய்ந்தான்: ராஜீவ்காந்தி சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் எனது தொகுதியில் கடந்த 2015–ம் ஆண்டு முதல் இதுவரை யாருக்கும் நிதி வழங்கப்படவில்லை. சென்டாக் மூலம் தேர்வான மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் கல்விக்கட்டணத்தை வழங்கவேண்டும். அதேபோல் முதியோர் உதவித்தொகையும் வழங்கப்படவேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களைப்போல் பிற சமுதாய மக்களுக்கும் இலவச துணிமணிகள் வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story