புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் தள்ளிப்போவது ஏன்? நாராயணசாமி விளக்கம்
புதுவை சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்வது தள்ளிப்போவது ஏன்? என்பதற்கு விளக்கம் அளித்த முதல்–அமைச்சர் நாராயணசாமி மாநில அதிகாரத்தை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று உறுதியளித்தார்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் தள்ளிப்போவது ஏன் என்பதற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்தார்.
இதுதொடர்பாக புதுவை சட்டசபையில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. எழுப்பிய பிரச்சினையை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:–
அன்பழகன்: புதுவை பட்ஜெட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதா? எப்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்? அதில் ஏதாவது பிரச்சினை உள்ளதா? அதிகாரிகள் சரியாக செயல்படவில்லையா?
முதல்–அமைச்சர் நாராயணசாமி: கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு கவர்னர் தலைமையில் மாநில திட்டக்குழு கூட்டம் நடத்தப்பட்டு பட்ஜெட் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அந்த கூட்டத்தின் முடிவு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. அதற்கு உள்துறை மந்திரி ஒப்புதல் அளித்து நிதித்துறைக்கு சென்றது. தற்போது அந்த பொறுப்பினை வகிக்கும் மத்திய மந்திரி பியூஸ் கோயலுடன் பேசி ஒப்புதல் பெற்றேன். மீண்டும் அந்த கோப்பு உள்துறை அமைச்சகத்துக்கு வந்தது.
அதில் ரூ.389 கோடி மத்திய அரசின் திட்டங்களுக்கு மானியம் கேட்டிருந்தோம். கடந்த காலங்களைப்போல் இதுவும் உத்தேசமாக கேட்கப்பட்டது. அதை துறைவாரியாக பிரித்து கொடுப்பார்கள். இதுதொடர்பாக நேற்று விளக்கம் கேட்டு கோப்பு வந்தது. அதுதொடர்பான பதிலை இன்று (நேற்று) அனுப்ப உள்ளோம். இன்னும் ஓரிரு நாட்களில் அனுமதி கிடைத்துவிடும்.
அன்பழகன்: திட்டக்குழு கூட்டம் எப்போது நடந்தது?
நாராயணசாமி: திட்டக்குழு கூட்டம் 1½ மாதங்களுக்கு முன்பு நடந்தது. கோப்பு அனுப்பி ஒரு மாதம் ஆகிறது.
அன்பழகன்: அந்த கோப்பு 17 நாட்கள் கவர்னரிடம் இருந்துள்ளது. அதற்கு என்ன காரணம்?
நாராயணசாமி: துரிதமாக ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கிறோம். கடந்த காலங்களில் 15 நாட்களில் ஒப்புதல் கிடைத்துள்ளது.
என்.எஸ்.ஜே.ஜெயபால் (என்.ஆர்.காங்): பட்ஜெட்டிற்கு அனுமதி இல்லாமல் இந்த சட்டசபையில் பேசி என்ன பயன்? ஒப்புதல் வந்தபின் சட்டமன்றத்தை நடத்துங்கள்.
அமைச்சர் கந்தசாமி: நீங்கள்தான் பாரதீய ஜனதா கூட்டணியில் உள்ளீர்களே. கவர்னரிடம் ஒப்புதல் பெற சொல்லுங்கள்.
சபாநாயகர் வைத்திலிங்கம்: இப்போது கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதுதான் விவாதம் நடக்கிறது.
அன்பழகன்: பட்ஜெட்டில் என்ன உள்ளது? என்பதை பொதுமக்களும், வியாபாரிகளும் எதிர்நோக்கி உள்ளனர். அப்படி இருக்க இந்த சட்டமன்றத்தை அவமதிக்கும் செயலை சிலர் செய்துள்ளனர். இதற்கு காரணம் உங்கள் அரசின் செயல்படாத தன்மையா? அல்லது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையா? இதற்கு தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர் என்ன சொல்லப் போகிறார்கள்? சட்டமன்ற கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்ட பின்னரும் அனுமதி வராமல் இருப்பது ஜனநாயகத்துக்கு விடப்பட்ட செயல்.
சிவா (தி.மு.க.): புதுவை சட்டமன்றத்தில் தொடர்ந்து முழு பட்ஜெட் போடவிடாமல் மாநில அதிகாரிகள் அந்தமான் போன்று சிறுமைப்படுத்தி வருகிறார்கள். இந்த பிரச்சினையை முதல்–அமைச்சர் டெல்லி சென்று பெரிதாக்க வேண்டும். இது மாநிலத்தை சிறுமைப்படுத்தும் செயல். அதிகாரிகள் கைவசம் ஆட்சியை கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள்.
நாராயணசாமி: யாரும் எம்.எல்.ஏ.க்கள் அதிகாரத்திலோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்திலோ தலையிட அனுமதிக்கமாட்டோம். நானே நேரில் சென்று உள்துறை மந்திரியை சந்தித்து பேச உள்ளேன். இதில் யார் குறுக்கிட்டாலும் புதுவை மாநிலத்தின் அதிகாரத்தில் ஒரு அங்குலம்கூட விட்டுக்கொடுக்கமாட்டோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.