என் மகள் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும்: பிரதீபாவின் தந்தை பேட்டி
என் மகள் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பிரதீபாவின் தந்தை சண்முகம் கூறினார்.
திருவண்ணாமலை,
என் மகள் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பிரதீபாவின் தந்தை சண்முகம் கூறினார்.
இது தொடர்பாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பிரதீபாவின் தந்தை சண்முகம் கண்ணீருடன் கூறியதாவது:-
எனது மூத்த மகள் உமாபிரியா. வேலூரில் உள்ள ஊரீசு கல்லூரியில் எம்.சி.ஏ. படிக்கிறார். மகன் பிரவீன்ராஜ் மயிலத்தில் என்ஜினீயரிங் படிக்கிறார். இளைய மகள் பிரதீபா டாக்டராக வேண்டும் என்ற கனவுடன் இருந்தார்.
‘நீட்’ தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகும் என்று எனக்கு முதலில் தெரியாது. நானும், என் மனைவியும் வேலைக்கு சென்றுவிட்டோம். பிறகு வீடு திரும்பியபோது, மகள் பிரதீபா வாந்தி எடுத்து கொண்டிருந்தார். என்னவென்று கேட்டதற்கு ‘நீட்’ தேர்வில் தோல்வியடைந்து விட்டேன். நான் டாக்டராக முடியாது. அதனால் தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்துவிட்டேன் என்று கூறி கதறி அழுதார்.
உடனடியாக எனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றோம். மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். எங்கள் மகளை ‘நீட்’ தேர்வு கொன்று விட்டது.
தமிழகத்தில் என் மகளை போன்று ஏராளமான மாணவ, மாணவிகள் சமச்சீர் பாடத்திட்டத்தில் படித்து ‘நீட்’ தேர்வுக்காக தனி பயிற்சி எடுத்து எழுதி, குறைந்த மதிப்பெண்களை பெற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
‘நீட்’ தேர்வில் 2-வது முறையாகவும் குறைந்த மதிப்பெண் பெற்றதால் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காத விரக்தியிலேயே என் மகள் தற்கொலை செய்து கொண்டாள். என் மகள் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
டாக்டராகி பல உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற கனவில் இருந்தாள். ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ உதவி செய்து கொடுக்க வேண்டும் என்று என் மகள் ஆசைப்பட்டாள். ஆனால் அது நடக்கவில்லை. எனவே, ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story