பள்ளம் தோண்டிய போது பெருமாள் சிலை கண்டெடுப்பு அருள்வாக்கு கூறிய பக்தர்களால் பரபரப்பு


பள்ளம் தோண்டிய போது பெருமாள் சிலை கண்டெடுப்பு அருள்வாக்கு கூறிய பக்தர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Jun 2018 4:30 AM IST (Updated: 6 Jun 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே பள்ளம் தோண்டிய போது பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது. பக்தர்கள் அருள்வாக்கு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓமலூர்,

ஓமலூரை அடுத்த செம்மாண்டப்பட்டியில் நெடுஞ்சாலை துறை சார்பில் தார்சாலை மற்றும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று செம்மாண்டப்பட்டியில் சாக்கடை கால்வாய் அமைக்க பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.

அப்போது சுமார் 4½ அடி உயரம் உள்ள சாமி சிலை கிடைத்தது. இதுபற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் அந்த சிலையை எடுத்து சென்று செம்மாண்டப்பட்டி சந்தை திடலில் வைத்தனர். பின்னர் சிலையை தண்ணீர் ஊற்றி கழுவிய போது பெருமாள் சிலை என்பது தெரியவந்தது. அந்த சிலை வேலைப்பாடு முழுமை அடையாமல் இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்த செம்மாண்டப்பட்டி வருவாய் அய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் மேகலா மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், ஓமலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அதற்குள் அங்கிருந்த ஆண்களும், பெண்களும் சாமி சிலையை கழுவி பாலாபிஷேகம் செய்து மாலையிட்டு வழிபட தொடங்கி விட்டனர். அங்கு வந்த வருவாய் துறையினர் சிலையை எடுத்து செல்ல முயன்றனர். ஆனால் பொதுமக்கள் தடுத்து நிறுத்தி எங்கள் ஊரில் கிடைத்த சிலையை தரமாட்டோம் என கூறினர்.

அப்போது அங்கிருந்த ஒரு பெண்ணும், ஒரு வாலிபரும் சாமி வந்ததாக அருள்வாக்கு கூறினர். அந்த சாமி வீரஆஞ்சநேயர் பெருமாள் எனவும் இந்த ஊரை காக்க வந்ததாகவும், அங்குள்ள சிவன் கோவிலில் வைத்து கும்பாபிஷேகம் நடத்தி வழிபட்டால் விவசாயம் செழிக்கும், மக்கள் நன்றாக வாழ்வர் எனவும், நல்லது செய்யவே இவ்வளவு நாள் மண்ணில் புதையுண்டு இருந்த சிலை தற்போது வெளிவந்துள்ளது எனவும் பக்தர்கள் அருள்வாக்கு கூறினர். இதையடுத்து வாக்கு கூறிய வாலிபருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

இந்த நிகழ்வை அடுத்து சமரசம் பேசிய போலீசார், தொல்லியல் துறையில் ஒப்படைக்கப்பட்ட பின்பு உரியமுறையில் மனு கொடுத்து சிலையை பெற்று கொள்ளலாம் என தெரிவித்தனர். அதன்பிறகு சிலையை வருவாய்த்துறையினர் எடுத்து சென்றனர்.

இதுகுறித்து வருவாய் துறையினர் கூறும்போது, ‘இந்த பகுதியில் சாமி கற்சிற்பம் செதுக்கும் பணி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. அப்போது அதில் வேலைப்பாடு குறை ஏற்பட்டு அப்படியே விட்டிருக்கலாம்‘ என்றார்கள். ஆனால் பொதுமக்கள் கூறும்போது,‘அந்த பகுதியில் பல வரலாற்று சிறப்புமிக்க பெருமாள், சிவன் கோவில்கள் உள்ளன. அந்த இடத்தில் கோவில் இருந்து மண்ணில் புதைந்திருக்கலாம்‘ என்று தெரிவித்தனர். 

Next Story