கொலை முயற்சி, கொள்ளை உள்பட 7 வழக்குகளில் தொடர்பு: போலீஸ்காரரை குத்திவிட்டு தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கி சூடு
பெங்களூருவில், போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தனர்.
பெங்களூரு,
பெங்களூருவில், போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரவுடி கொலை முயற்சி, கொள்ளை உள்பட 7 வழக்கு களில் தொடர்பு கொண்டவர் ஆவார்.
கொள்ளை சம்பவங்கள்
பெங்களூரு விஜயநகர், காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் இரவில் அடிக்கடி வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடந்த மே மாதம் 21-ந் தேதி இரவு பிரவீன் என்பவர் பட்டேகாரபாளையாவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த 5 மர்மநபர்கள் கத்தி, அரிவாளால் அவரை தாக்கிவிட்டு ரூ.15 ஆயிரம் மதிப்பிலான செல்போனை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதேபோல், கடந்த 2-ந் தேதி காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் குறித்த தனித்தனி புகார்களின் பேரில் முறையே விஜயநகர், காமாட்சிபாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும், கொள்ளையர்களை பிடிக்க பெங்களூரு மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ரவி.டி.சன்னன்னவர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
ரகசிய தகவல்
முதற்கட்டமாக தனிப்படை போலீசார் கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பிரதீப் மற்றும் அக்ஷய் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின்போது, அவர்கள் 2 பேரும் சரவணா என்ற தருண், நந்தீஷ் மற்றும் சுமந்த் ஆகியோருடன் சேர்ந்து கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து சரவணா, நந்தீஷ் மற்றும் சுமந்த் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், தலைமறைவாக உள்ள 3 பேரும் சும்மனஹள்ளி சந்திப்பு பகுதியில் ஆட்டோவில் சுற்றுவதாக தனிப்படை போலீசாருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகேஷ் தலைமையிலான போலீசார் போலீஸ் வாகனத்தில் அங்கு சென்று ஆட்டோவை சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்தவுடன் ஆட்டோவில் இருந்த சரவணா உள்பட அனைவரும் வேகமாக இறங்கி ஓடினார்கள். அவர்களை போலீசார் பின்தொடர்ந்து விரட்டி சென்றனர்.
துப்பாக்கி சூடு
இதனால் கோபமடைந்த கொள்ளை கும்பல், போலீஸ்காரர் சீனிவாசமூர்த்தியை கத்தியால் தாக்கியதோடு, பிற போலீஸ்காரர்களையும் தாக்க முயன்றது. இந்த சந்தர்ப்பத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகேஷ், வானத்தை நோக்கி துப்பாக்கியால் ஒரு முறை சுட்டு, சரண் அடையும் படி கூறினார். ஆனால், அவர்கள் போலீசில் சரண் அடைய மறுத்து தங்களை பிடிக்க முயற்சிக்கும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பித்து செல்லும் வகையில் ஓடினார்கள்.
இதனால் இன்ஸ்பெக்டர் நாகேஷ், போலீசாரின் பாதுகாப்பு கருதி கொள்ளையர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில், சரவணாவின் காலில் குண்டு பாய்ந்தது. இதனால், அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். மற்றவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
ரவுடி பட்டியலில் பெயர்
இதைத்தொடர்ந்து குண்டு காயமடைந்த சரவணாவை போலீசார் கைது செய்து, அவரை விக்டோரியா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதேபோல், கத்தி குத்து காயமடைந்த போலீஸ்காரர் சீனிவாச மூர்த்தி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீஸ் விசாரணையில், குண்டு காயமடைந்த சரவணா பேடரஹள்ளியில் உள்ள துங்காநகரை சேர்ந்தவர் என்பதும், அவர் 21 வயது நிரம்பியவர் என்பதும் தெரியவந்தது. மேலும் கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, திருட்டு என்று காமாட்சிபாளையா போலீஸ் நிலையத்தில் 5 வழக்குகள், விஜயநகர் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் என்று மொத்தம் 7 வழக்குகள் சரவணா மீது பதிவாகி உள்ளது தெரியவந்தது. இவருடைய பெயர் காமட்சிபாளையா போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளதும் தெரியவந்தது. தப்பி ஓடிய சரவணாவின் கூட்டாளிகளான நந்தீஷ், சுமந்த் ஆகியோரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story