கடலூர் மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு: 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; டிரைவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை


கடலூர் மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு: 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; டிரைவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 6 Jun 2018 4:45 AM IST (Updated: 6 Jun 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், உடந்தையாக இருந்த பெண் உள்பட 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கடலூர், 

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள அள்ளூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவருடைய மகன் ஆனந்தராஜ் (வயது 25). டிரைவர். இவரும், அதே பகுதியை சேர்ந்த சேர்ந்த 14 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவியும் காதலித்து வந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் மாணவியின் தாய் அவர்களை கண்டித்தார். இந்நிலையில் கடந்த 3.5.2015 அன்று வீட்டில் இருந்த அந்த மாணவியை ஆனந்தராஜ் சேத்தியாத்தோப்பு புதிய ஆற்று பாலத்துக்கு வரவழைத்தார். அதன்படி அந்த மாணவி வந்தார். அதன்பிறகு அந்த மாணவியை ஆனந்தராஜ், தனது நண்பர் கணேசன் மகன் உதயமூர்த்தி (25) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் விருத்தாசலம் பழைய விளாங்குப்பம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணன் மனைவி ராஜவள்ளி (55) வீட்டுக்கு கடத்தி சென்றனர்.

அங்கு சென்றதும் உதயமூர்த்தி சென்று விட்டார். அதன்பிறகு ஆனந்தராஜ் அந்த மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதற்கு ராஜவள்ளி உடந்தையாக இருந்தார். இது பற்றி மாணவியின் தந்தை சேத்தியாத்தோப்பு மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஆனந்தராஜையும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக உதயமூர்த்தி, ராஜவள்ளி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஆனந்தராஜிக்கு 15 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.55 ஆயிரம் அபராதமும், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட உதயமூர்த்திக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.27 ஆயிரம் அபராதமும், ராஜவள்ளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் அபராத தொகையில் ரூ.75 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.

Next Story