‘தமிழ் மொழி வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது’: பிரதீபா எழுதிய கடிதத்தில் அதிர்ச்சி தகவல்
நீட் தேர்வில் தமிழ் மொழி வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்று பிரதீபா எழுதிய கடிதத்தில் அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார்.
மேல்மலையனூர்,
மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான ‘நீட்’ கடந்த ஆண்டு அனிதா என்கிற மாணவியின் உயிரை நம்மிடம் இருந்து பறித்து சென்றது. தமிழகத்தையே இந்த சம்பவம் உலுக்கியது. இதை தொடர்ந்து தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் போராட்டங்களை நடத்தின.
இதற்கிடையே இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு அறிவிப்பு வெளியானது. இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான மையங்கள் ஒதுக்கீடு செய்ததில் இருந்தே, பிரச்சினைகள் எழுந்தது. மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டனர்.
இதனால் தேர்வு எழுத சென்ற இடத்திலும் ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவியின் தந்தையின் உயிரை பலி வாங்கியது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் தேர்வு முடிவு வெளியான நிலையில் பிரதீபா என்கிற மாணவி, நீட் தேர்வு தோல்வியால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா தன் கைப்பட டெக் ஆப் ஆல் என்கிற என்.ஜி.ஓ. நிறுவனத்துக்கு எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் அவரது பெயர் மற்றும் நீட் தேர்வு தொடர்பான உயர் அதிகாரி அலுவலக முகவரி ஆகியவை ஆங்கிலத்திலும் கடித விவரம் தமிழிலும் எழுதப்பட்டு இருந்தது. அதில் எழுதப்பட்டுள்ளதாவது:-
அனுப்புநர்
s.pr-a-d-e-e-pa sha-n-mu-g-am
ro-ll no: 512408944
2/4 pa-d-hi street
pe-ruv-a-l-our vi-l-l-a-ge & post
me-l-m-a-l-ay-a-nur Tk, vi-l-lu-pu-r-am Dt
pin 604208
பெறுநர்
tech of all,
ch-e-n-n-ai 41
நான் 2018- மே 6-ந்தேதி தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவி. தமிழ் மொழியில் வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டு கேட்கப்பட்டிருந்ததால், அந்த வினாக்களுக்கு அதற்கு உரிய மதிப்பெண்கள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
s.pr-a-d-e-e-pa
மேற்கண்டவாறு அந்த கடிதத்தில் பிரதீபா குறிப்பிட்டுள்ளார். கடிதத்தை வளத்தி போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
பிரதீபா குறிப்பிட்டு இருக்கும் ‘டெக் ஆப் ஆல்’ என்கிற நிறுவனம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே தமிழ் வினாத்தாளில் இருந்த பிழைகளை சுட்டி காட்டி இருந்தது என்பது குறிப்பிடதக்கதாகும்.
இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வுக்கு, தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு வேறு மாநிலங்களிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் தமிழ் வழியில் தேர்வு எழுதுபவர்களுக்கு வினாத்தாள் வழங்குவதில் பிரச்சினைகள் எழும் என்று புகார் எழுந்தன. பல இடங்களில் இதுபோன்ற பிரச்சினைகளும் எழுந்தன. அதேபோன்று தற்போது இந்த மாணவியின் கடிதத்தில் தமிழ் மொழி வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story