சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை 100 சதவீதம் தவிர்க்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்
சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பயன்பாட்டினை 100 சதவீதம் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து மாவட்ட கலெக்டர் நடராஜன் பேசினார்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வனத்துறை, ராமேசுவரம் விவேகானந்தா வித்யாலயா, ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனம் ஆகியவை சார்பில் சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கி விழிப்புணர்வு பணிகளை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு வனத்துறை சார்பில் அரியமான் கடற்கரை பகுதிகளில் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்து மரக்கன்றுகள் நட்டார். மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரியமான் கடற்கரை பகுதியில் மாணவ–மாணவிகளை ஒன்றிணைத்து கடற்கரையில் சுற்றுப்புற தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக ராமேசுவரத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் விழாவில் மாவட்ட கலெக்டர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
விழாவில் கலெக்டர் நடராஜன் பேசியதாவது:– மாவட்டத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2017–18–ம் ஆண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் சாலையோரங்களில் நிழல் தரும் மரங்களை நடும் திட்டத்தின்கீழ் 4 லட்சம் மரக்கன்றுகளும், அரசு நிலங்கள் மற்றும் தனியார் வசம் விலையில்லாமல் மரக்கன்றுகள் வழங்கி பராமரிக்கும் வகையில் மொத்தம் 2 லட்சத்து 56 ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன. வனத்துறையின் மூலம் பெருங்கன்று மரம் நடும் திட்டத்தின்கீழ் 16,200 மரக்கன்றுகளும், தனியார் வசம் விலையில்லாமல் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு பராமரிக்கப்படும் வீதத்தில் 35,000 மரக்கன்றுகளும், 25,000 பனைமர விதைகளும் நடவு செய்யப்பட்டுஉள்ளன. ராமேசுவரத்தை மிகச்சிறந்த சுற்றுலா தலமாக உருவாக்கிடும் வகையில் ஒளி ஒலி காட்சிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு பணிகள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுஉள்ளது.
முதல்–அமைச்சர் ‘பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாடு’ என்ற உயரிய நோக்கத்தில் 2019–ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் தவிர தடிமன் வேறுபாடின்றி இதர மக்காத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அறிவித்துள்ளார்.
அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க 100 சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் சுற்றுப்புறத்தை மேம்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினைத் தவிர்த்து அதிகஅளவில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட வனஉயிரின பாதுகாவலர் அசோக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, வனத்துறை ரேஞ்சர்கள் ஞானப்பழம், நவீன்குமார், ரகுவரன், சிக்கந்தர் பாட்ஷா உள்பட அரசு அலுவலர்கள், ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பிரதிநிதிகள், பள்ளி மாணவ– மாணவிகள் கலந்துகொண்டனர்.