தன்னுடைய கையெழுத்தை போட்டு போலியாக சான்றிதழ் வழங்குவதாக நகர்நல அலுவலர் புகார், போலீஸ் சூப்பிரண்டிடம் மனு


தன்னுடைய கையெழுத்தை போட்டு போலியாக சான்றிதழ் வழங்குவதாக நகர்நல அலுவலர் புகார், போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
x
தினத்தந்தி 7 Jun 2018 3:00 AM IST (Updated: 7 Jun 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

தன்னுடைய கையெழுத்தை போட்டு போலியாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நகர்நல அலுவலர் அனிதா, போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் புகார் அளித்தார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல்லை அடுத்த பொன்மாந்துரை அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த ஆச்சிமுத்து மனைவி மருதாயம்மாள் (வயது 80). ஆச்சிமுத்து இறந்துவிட்டார். தான் உயிருடன் இருக்கும் போதே என்னுடைய பெயரில் போலியாக இறப்பு சான்றிதழ் பெற்று, மகன் மற்றும் பேரன் சேர்ந்து தனது பெயரில் உள்ள நிலத்தை அபகரித்து விற்றுவிட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மருதாயம்மாள் புகார் அளித்தார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்தபோது, திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்த பிறப்பு சான்றிதழ் போலி என்பதும் தெரியவந்தது.

அதாவது ஒருவர் தன்னுடைய தந்தைக்கு வாங்கிய பிறப்பு சான்றிதழில், அவர் 1928-ம் ஆண்டு, திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிறந்ததாக கூறி, கடந்த ஜனவரி மாதம் பிறப்பு சான்றிதழ் வாங்கியுள்ளார். ஆனால் அந்த காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை தொடங்கப்படவே இல்லை. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில் மாநகராட்சி நகர்நல அலுவலர் அனிதா, நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் ஒரு புகார் அளித்தார். அதில், மாநகராட்சி முத்திரையை போலியாக தயாரித்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்த சான்றிதழ்களில் என்னுடைய கையெழுத்தையும் போலியாக போடப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமிக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். 

Next Story